ராகம, மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஜும்ஆப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டிடத்தில், சில நாட்களுக்கு முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளினால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்பள்ளிவாசல், சுமார் 100 வருடங்கள் பழைமைவாய்ந்தது என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் தனவந்தர் ஒருவரினால் நன்கொடை செய்யப்பட்ட காணியிலேயே இப்பள்ளிவாசல் இதுவரை காலமும் இயங்கி வந்துள்ளது. ராகம பிரதேச முஸ்லிம்கள் இதனையே தமது தொழுகைக்காகப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் மஹர சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்பள்ளிவாசலுக்கு மக்கள் தொழுகைக்காக வருவதைத் தடை செய்திருந்தனர்.
இதேவேளை, இப்பள்ளிவாசலைச் சுத்தம் செய்யவோ அல்லது இங்கிருந்த பொருட்களை எடுப்பதற்கோ, எவருக்கும் அனுமதி வழங்கப்படவுமில்லை.
ராகம பிரதேசத்தில் நிகழும் (ஜனாஸா) மையங்களுக்குத் தேவையான கழுவும் கட்டில் மற்றும் சந்தூக்கு போன்றவற்றைக் கூட மாபோல பள்ளிவாசலில் இருந்தே பெற்றுக்கொண்டதுடன், ஜனாஸாத் தொழுகைகள் கூட மையவாடிக்கு அருகாமையிலிருக்கும் பழைய வீட்டிலேயே தொழுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பள்ளிவாசல் கட்டிடம், அண்மையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் புனரமைக்கப்பட்டு, ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டுள்ளதுடன் உள்ளே புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் துர்ப்பாக்கியமான சம்பவம் தொடர்பில் அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் போன்றோர், மிக அவசரமாக தங்களது கவனத்திற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.