இலங்கை அரசாங்கம், சர்வதேசத்தின் பிடியில் தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருக்குமென வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை அரசின் தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் அனுசரணையுடன் இலங்கை அரசும் அதனை நிறைவேற்றுவதாக இணை அனுசரணை வழங்கியிருந்தது.
மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் சர்வதேச நீதி விசாரணை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளைத் தீர்த்தல், நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணல் போன்ற முக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருந்தது.
நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஆட்சிபீடம் ஏறிய கோட்டாபய அரசு இந்தத் தீர்மானத்தை தாம் நிராகரிப்பதாகவும் அதிலிருந்து விலகுவதாகவும் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கம் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பாரிய பாதிப்புக்கள் எதனையும் ஏற்படுத்தாது.
ஏனெனில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பல உறுப்பு நாடுகளின் அனுசரணையுடனேயே நிறைவேற்றப்பட்டது.
இதில் இலங்கை அரசு விலகுவதாகக்கூறுவது ஒரு சிறு பகுதி மட்டுமே ஏனைய உறுப்பு நாடுகளின் வலுவான அனுசரணை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும்.
எனவே குறித்த தீர்மானம் முழுமையான திருப்தியை தராது விட்டாலும் சர்வதேச வலுவுடையதாகவே இருக்கும்.
தென்னிலங்கை மக்களுக்கு தேசிய வாதத்தை பேசி படம் காட்டுவதற்காகவே 30/1 தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அரசாங்கம் கூறியுள்ளது.
எனவே இலங்கை அரசாங்கம் குறித்த தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும் அந்தத் தீர்மானம் தொடர்ச்சியாகவே இருந்துகொண்டே இருக்கும்.
அரசு விலகுவதால் பாதிப்பு மிகக் குறைவு என்றே நான் கருதுகின்றேன். இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் பிடியில் தொடர்ச்சியாகவே இருந்துகொண்டே இருக்கும்” எனத் தெரிவித்தார்.