கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதைத் தடுப்பதை ஏற்கமுடியாது- சுரேஷ் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, February 16, 2020

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதைத் தடுப்பதை ஏற்கமுடியாது- சுரேஷ்

சாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை தாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆனால், முப்பது வருடங்களாகக் கேட்கப்பட்டுவரும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக அம்பாறை, கல்முனை பிரதேசத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விடயம் மிக நீண்ட காலமாகக் காணப்படும் பிரச்சினையாகும். கடந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை.

இந்த அரசாங்கமும் தேர்தல் காலங்களில் கடந்த அரசாங்கத்தைப் போல் உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. அந்த உறுதிமொழியைக் கேட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என இன்றுவரை உறுதியாக நம்பியிருக்கின்றனர். குறிப்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்பதை நான் உறுதிப்பட நம்புகிறேன்.

இதேவேளை, சாய்ந்தமருதிற்கு மாநகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் முப்பது வருடங்களாக கோரிக்கையாக இருக்கிற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இன்றுவரை ஒரு முழுமையான பிரதேச செயலகம் ஆக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

இங்கு இருக்கின்ற ஒரு தொகுதி அரசியல்வாதிகள் தொடர்ந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை சிறந்த விடயமல்ல. இந்நிலையில் கல்முனை வடக்கு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது. ஆகவே இருக்கின்ற ஏனைய சமூகங்கள் இதனை கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.

அத்துடன், கல்முனை வடக்கு மக்களுக்கு இந்த அரசாங்கம் நல்லது செய்ய விரும்பினால் இந்தப் பிரதேச செயலகத்தை தரமுயத்தி வழங்க வேண்டும். பிரதமர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். கருணா அம்மான் அவருக்கு இருக்கின்ற சக்தியைப் பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.