இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் தனி வீட்டுத் திட்டம் எவ்வித குறைபாடுகளும் இன்றி முன்னெடுக்கப்படும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இதனிடையே, இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கு சில அரசியல் வாதிகள் களங்கத்தை ஏற்படுத்த வேண்டாமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடமைப்பு வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹற்றன் வெளிஓயா தோட்டம் மேற்பிரிவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொண்டமான் மேலும் கூறுகையில், “இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்காக 4 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்தது. அதன்பின்னர் மேலும் 10 ஆயிரம் வீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது பாரதப் பிரதமரைச் சந்தித்து வீடமைப்புத் திட்டம் பற்றிக் கலந்துரையாடினேன்.
குறிப்பாக எமது மக்களுக்கு இன்னும் 2இலட்சம் வீடுகள் தேவைப்படுவதால் அடுத்தக் கட்டமாக வீடமைப்புத் திட்டங்களுக்கு உதவியளிக்கும் போது கூரை வீடுகளுக்குப் பதிலாக ‘சிலப்’ வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினேன். அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரினார். குறித்த அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றேன்.
இதேதேவேளை, சிலர் தற்போது வீடுகளைத் திறந்துவைக்கும் நிகழ்வில் பங்கேற்றுவருவதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. வீடுகளைத் திறவுங்கள், அதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. ஆனால், தண்ணீர், மின்சாரம், மலசலக்கூடம் என அடிப்படை வசதிகள் எதனையும் ஏற்படுத்திக் கொடுக்காத வீடுகளைத் திறந்து, இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கோருகின்றேன்” என்று குறிப்பிட்டார்.