சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான முறையில் சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2019ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களை பகுப்பாய்வு செய்கின்ற போதும் குற்றங்கள் குறைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
2018ஆம் ஆண்டில் 253 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும் 2019இல் 183 சம்பவங்கள் தான் பதிவாகியுள்ளன.
இத்தகைய குற்றச்செயல்களை தடுக்க 498 பொலிஸ் பிரிவுகள் நாடளாவிய ரீதியில் செயற்படுகின்றன. அவற்றின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பயிற்சிச் பெற்ற உத்தியோகர்களும் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு மேலதிகமாக சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இவற்றை தடுக்க செயற்படுகின்றன.
பாடசாலை மாணவர்கள், பெற்றோர், சமூக குழுகள் எனப் பலரும் இவர்களை அடையாளம் கண்டு விழிப்புணர்வு செய்யப்படுகின்றனர்.
பெண்கள், சிறுவர்கள் துஷ்பிரயோகங்கள் பொருளாதார காரிணிகளை மையப்படுத்தியும் இடம்பெறுகின்றன. சில மாதங்களில் இக்குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. சில மாதங்களில் குறைவடைகின்றன. அதன் அடிப்படையில் 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அதிகரித்துள்ளன.
எனவே எதிர்காலத்தில் பெண் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த எதிர்பார்க்கின்றோம். அதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சர்வதேச பொலிஸாருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுகிறன. குற்றச்செயல்களை தடுப்பதற்காக சைபர் சட்டமொன்றினையும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.