தேசிய சுதந்திர தினம் தலைநகரில் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால், சுதந்திர நாடாக 72 ஆவது வயதில் காலடி எடுத்து வைத்துள்ள இலங்கை, மோதல் நெருக்கடியுள்ள நாடாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. இந்த 2020ஆம் ஆண்டில் வன்முறைகள் அதிகரிக்கின்ற நாடாக இது திகழும் என்று அனுமானிக்கப்பட்டிருக்கின்றது. உலக நாடுகளின் நிலைமைக சர்வதேச நெருக்கடி குழுவே, இவ்வாறு அடையாளம் கண்டு ளை வருடாந்தம் கணித்து எதிர்வு கூறுகின்ற ஐசிஜி என்றழைக்கப்படுகின்றதனது அனுமானத்தை வெளிப்படுத்தி உள்ளது.
மேலும் எதிர்காலத்தில் நாட்டில் சமாதானமும், ஐக்கியமும் நிலைகுலையக் கூடிய ஆபத்தான நிலைமைகள் குறித்த எச்சரிக்கையையும் அது தொனி செய்திருக்கின்றது. ஆசிய பிராந்தியத்திலேயே இலங்கை மட்டுமே இத்தகைய நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றது என்பது அந்தக் குழுவின் வருடாந்த பார்வைக் கணிப்பாகும்.
பெல்ஜியம் நாட்டின் தலைநகராகிய பிரஸல்ஸில் தனது தலைமையகத்தைக் கொண்டுள்ள சர்வதேச நெருக்கடி குழுவானது. சுயாதீன இலாப நோக்கற்ற ஒரு அரச சார்பற்ற சர்வதேச நிறுவனமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற பிரஸல்ஸில் 1995ஆம் ஆண்டு பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள், ஆய்வாளர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்தக் குழுவின் சர்வதேச மட்ட நெருக்கடி மிக்க விவகாரங்கள், பிரச்சினைகள் தொடர்பிலான ஆய்வுகள், ஆய்வறிக்கைகள் சர்வதேச கொள்கை வகுப்பாளர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் சர்வதேச ஆய்வாளர்களினால் பயன்படுத்தப்படுகின்றன.
முரண்பாடுகளையும் மோதல்களையும் தடுத்து, சமாதானம் மிகுந்த ஓர் உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கான கொள்கைகளை வகுப்பதற்காகச் செயற்பட்டு வருகின்ற இந்தக் குழு சர்வதேசத்தின் நம்பிக்கைக்குரியதாகப் பணியாற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவினுடைய வருடாந்த ஆய்வறிக்கையின் மூலம் இலங்கையின் அரசியல் நிலைமை எந்த அளவுக்கு மோசமாகியுள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
புதிய ஆண்டிற்கே உரிய பற்பல கனவுகளை மக்கள் கொண்டிருந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் தலைமையில் நாடு 2020க்குள் பிரவேசித்தது. அதுவும் முப்பது வருடங்களாக ஆயுத முரண்பாட்டிற்குள் சிக்கி அதிலிருந்து மீள்வதற்கு வழியறியாதிருந்த நிலையில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களின் பிடியில் இருந்து நழுவிச் சென்று மீண்டும் அவர்களுடைய பொறுப்பில் ஆட்சி அதிகாரம் மீண்டுள்ளதையடுத்து, இந்த நிலைமை உருவாகி இருக்கின்றது.
இன உறவுகள், யுத்தத்தின் பின்னரான நிலைமைகளில் மரபு ரீதியாக ஏற்பட வேண்டிய நிலைமைகள், சட்டவாட்சி என்பவற்றின் அடிப்படைக் கொள்கைகளைப் புரட்டிப் போட்டுள்ள இந்த ஆட்சி மாற்றத்தை சர்வதேச நெருக்கடி குழு ‘இலங்கையின் அபாயகரமான பேரலை மாற்றம்’ என பெயர் சூட்டி குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைகளுக்கு உருவாகியுள்ள சவால்கள்
புதிய ஆட்சியில் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி ஏற்றுள்ள கோத்தபாய மற்றும் மஹிந்த ராஜபக் ஷ சகோதரர்கள், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், ஜனாதிபதியாகவும் செயற்பட்டிருந்த ஒரு தசாப்தத்துக்கும் முந்திய காலத்தில் யுத்த நியதிச் சட்டங்களை அப்பட்டமாக மீறியிருந்தனர் என்று ஆதாரபூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள் என்பதை சர்வதேச நெருக்கடிக் குழு தனது அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் எட்டியிருந்த சட்டபூர்வமான அடைவுகள், கொண்டிருந்த கொள்கை ரீதியிலான கடப்பாடுகள் என்பவற்றில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் தலைகீழான மாற்றங்களைச் செய்துள்ளது. அத்துடன், யுத்தத்துக்குப் பின்னர் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், பொறுப்புக் கூறுகின்ற கடப்பாடு, (சிறுபான்மையினரையும்) உள்வாங்கிய அரச நிர்வாகம் என்பவற்றில் ஐரோப்பிய ஒற்றியத்துக்கும், ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் இலங்கை ஏற்கனவே வழங்கியிருந்த உறுதிமொழிகளையும் புதிய அரசு மீறியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களின் மத்தியில் வேரூன்றியுள்ள இன ரீதியிலான தேசிய உணர்வு பரிமாணத்தின் அடிப்படையிலான இந்த அரசியல் கொள்கை மாற்றம் இன, மத ரீதியான பதற்ற நிலைமைகளை அதிகரிக்கின்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இவற்றைக் கட்டுப்படுத்த வல்ல நிறைவேற்று அதிகாரத்தினதும், அரசினதும் சக்தியையும் அது பலவீனப்படுத்தி உள்ளது.
சகலரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாக முறைமையில் நிலைகொண்டுள்ள உறுதியான அரசியல் நிலைப்பாடு, மேம்பாடுடைய மனித உரிமைகள், இனங்களுக்கிடையிலான நல்லுறவு என்பவற்றிற்கு ஆதரவளிக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டிற்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றமும், அரசியல் கொள்கைகளிலான மாற்றமும் ஆழமான சவால்களை விடுத்துள்ளன.
இத்தகைய பின்புலத்தில், சட்டவாட்சி, மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற அரசாட்சி என்பவற்றுக்கு முன்னைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அளித்திருந்த உறுதிமொழியையும் கடப்பாட்டையும் நிறைவேற்றுமாறு கொழும்பு அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியமும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச நெருக்கடி குழு தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.
நாட்டின் சனத்தொகையில் முக்கால்வாசியினரைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள சிங்கள பௌத்த மக்களின் அதிகப்படியான எண்ணிக்கையானவர்களின் ஆதரவை இன, மதத் துவேச அரசியல் பிரசாரங்களின் மூலம் ஒன்றுதிரட்டி தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபாய ராஜபக் ஷ
ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிக் கொண்டார். தேர்தல் வெற்றிச் சூட்டோடு சூடாக முன்னாள் ஜனாதிபதியும் தனது சகோதரருமாகிய மஹிந்த ராஜபக் ஷவை நாட்டின் பிரதமராகப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அதிரடி நடவடிக்கைகள்
இறுதி யுத்தத்தின்போது விடுதலைப்புலிகளுக்கு எதிராகக் கடும் போக்கிலான இராணுவ நடவடிக்கைகளுக்கான அரசியல் பாதுகாப்புத் தீர்மானங்களை மேற்கொண்டு அதீத அதிகார பலத்துடன் செயற்பட்டிருந்த சகோதரர்கள் இருவரும் அதிகார பலத்தை சுமார் நான்கு வருட காலம் இழந்திருந்தனர். ஆனால் 2019 செப்டம்பர் தேர்தலின் மூலம் பொதுஜன பெரமுன என்ற புதிய அரசியல் கட்சியின் ஊடாக அமோக வெற்றியீட்டி மீண்டும் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளார்கள்.
ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றிய வேகத்தில் அரச நிர்வாக நடைமுறைகளிலும், ஆட்சி நிர்வாகத்திலான கொள்கை நிலைப்பாட்டிலும் அதிரடியாகப் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. புதிய அரசாங்கத்திற்கான அமைச்சரவையில் எந்தவொரு முஸ்லிம் தலைவருக்கும் இடமளிக்கப்படவில்லை. இரண்டே இரண்டு தமிழ் அரசியல் தலைவர்களுக்கே அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன.
சிறுபான்மை இன மக்களை அரசியல் அதிகார அந்தஸ்தில் இருந்தும், அரசியலில் இருந்தும் ஓரங்கட்டுவதற்கான முதற்படியாக இந்த அமைச்சரவை நடவடிக்கைகள் அமைந்தன. தொடர்ந்து முன்னைய அரசாங்கத்தினால், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் உரித்தெடுக்கப்பட்டிருந்த ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகார பலத்தை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பில் புதிய மாற்றங்களைச் செய்யவும், தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளின் தொகுதிவாரியான வாக்குப் பலத்துக்கான வெட்டுப் புள்ளியை 5 இலிருந்து 15 வீதமாக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமானால், ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாகுவதற்குத் தேர்தலில் பங்கேற்க வழி பிறக்கும்.
பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதி எந்தவோர் அமைச்சுப் பொறுப்புக்களையும் கொண்டிருக்க முடியாது என்ற வரையறையில் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டால், எத்தனை அமைச்சுக்களையும் ஜனாதிபதி பொறுப்பேற்று தனது கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடியும்.
அது மட்டுமல்லாமல் நீதிபதிகள், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு அரசியலமைப்புச் சபையின் பங்களிப்பின்றி தன்னிச்சையாக தனக்கு விருப்பமானவர்களை ஜனாதிபதி நியமிப்பதற்கு உரிய அதிகார வல்லமையையும் இந்த உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
சிக்கலான நிலைமை
பெரும்பான்மையினராகிய சிங்கள மக்கள் எதிர்க்கின்றார்கள் எனச் சுட்டிக்காட்டி, மாகாணங்களுக்கான ஆட்சி உரிமைகளை மேம்படுத்துவதற்கும், ஏற்கனவே அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கலை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராஜபக் ஷக்கள் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றார்கள்.
இதனால் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் சிறுபான்மை இனத்தவர்களின் சுய ஆட்சி உரிமைகளை நோக்கிய பொறிமுறை மட்டுப்படுத்தப்படுகின்றது என்று சர்வதேச நெருக்கடிக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய அரசாங்கத்தின் கடும் போக்கான செயற்பாடுகளினால் மேம்படுத்தப்பட வேண்டிய சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவதுடன், ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்ற உரிமைகளும் இல்லாமலாக்கப்படுவற்கான சூழல் உருவாகி வருகின்றது.
தேசிய சுதந்திர தின வைபவத்தில்
தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்ற – சிறுபான்மை இன மக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையிலான கடும் போக்கிலான அரசாங்கத்தின் நிலைப்பாடும் இத்தகைய உரிமை மறுப்பின் அடையாளமாகவே வெளிப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச நெருக்கடி குழு சுட்டிக்காட்டியுள்ள சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற ஜனநாயகப் பண்புகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியமும், சர்வதேச நாடுகளும் இலங்கையின் வெளிவிவகார நிலைமைகளில் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகள் உள்நாட்டில் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் பதற்ற நிலைமையை உருவாக்க வழிகோலக் கூடும்.
பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் பொறுப்புக் கூறுகின்ற அதன் கடப்பாட்டுச் செயற்பாடுகள் தொடர்பிலான நிலைமைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியாக உள்ளது.
அந்த அறிக்கை தொடர்பிலும், மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் தனது நிலைப்பாட்டை எடுத்துரைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது ஒரு சிக்கலான நிலைமையாகவே காணப்படுகின்றது.
கைவிடப்பட்ட விசாரணைகள்
முன்னைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கி பொறுப்பு கூறும் கடப்பாட்டை நிறைவேற்றுவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்றுச் செயற்படப் போவதில்லை என்று புதிய அரசாங்கம் ஏற்கனவே கூறியுள்ளது. அத்துடன் அதற்கான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களையே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கருத்துக்களையும் அது வெளியிட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறைகளில் ஒன்றாக முன்னைய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகத்துக்கான சட்ட வரைபுகளில் மாற்றம் செய்வதற்கான முனைப்பையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் முரண் நிலையிலான இத்தகைய நிலைப்பாட்டில், அழுத்தங்கள் நிறைந்த புதிய திருப்பத்தையே சர்வதேச மட்டத்தில் இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.
சில மாதங்களில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் எப்படியாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் புதிய ஆட்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். ஜனாதிபதி தேர்தலில் பிரயோகித்த அதே பிரசார உத்தியைக் கைக்கொண்டு இந்தத் தேர்தலிலும் அமோகமாக வெற்றியடைய வேண்டும் என்ற இறுக்கமான தீர்மானத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இந்த நிலையில் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் பொருளாதார பலத்தைத் தாங்கி நிற்பதாகக் கருதப்படுகின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகை உரிமைகளில் பாதிப்பை ஏற்படுத்தத் தக்க வகையிலான அழுத்தங்கள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலும், அதற்கு வெளிப்பரப்பிலும் ஏற்படுமானால் அது அமைதிக்கு ஒவ்வாத நிலைமைகளையே உள்நாட்டில் ஏற்படுத்தக் கூடும்.
மனித உரிமை மீறல்களையும், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களையும் உள்ளடக்கிய போர்க்குற்றச் செயற்பாடுகள் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றிருந்தன என்ற சர்வதேச மட்டத்திலான குற்றச்சாட்டுக்களை புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள பேரின அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்கள். மனித உரிமைகள் மீறப்படவில்லை. போர்க்குற்றச் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்பது அவர்களுடைய உறுதியான நிலைப்பாடு.
போர்க்குற்றச்சாட்டுக்களின் நிழல் வடிவிலான – கடற்படையினர் சம்பந்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள, கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் கருதப்படுகின்ற 11 மாணவர்கள் தொடர்பிலான சம்பவம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை, மற்றுமொரு ஊடகவியலாளராகிய கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவம் உள்ளிட்ட அரசியல் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட படைத்தரப்பினருக்கு எதிரான விசாரணைகளைப் புதிய அரசு கைவிட்டுள்ளது.
நிலைமாற்ற அரசியல் போக்கு
இந்தச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த புலனாய்வு பிரிவின் உயரதிகாரிகள், கீழ் நிலைத் தரத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் முக்கிய அதிகாரியாகிய நிசாந்த சில்வா என்பவர் குடும்பத்துடன் நாட்டைவிட்டு தப்பியோடி சுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக அரசாங்கமே அறிவித்துள்ளது. அத்துடன் இவர்கள் புலனாய்வு விசாரணை என்ற போர்வையில் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்ட தேசத்துரோகிகள் என்ற ரீதியிலும் கணிக்கப்பட்டுள்ளார்கள்.
இத்தகைய பின்னணியில்தான் ஐசிஜி என்ற சர்வதேச நெருக்கடி குழு இலங்கையை நெருக்கடிகள் மிகுந்த ஒரு நாடாகவும், 2020 இல் வன்முறைகள் நிறைந்ததாகவும் திகழும், இது உள்நாட்டு சமாதானத்துக்கும், இனங்களுக்குமிடையிலான நல்லிணக்கம், நல்லுறவு மற்றும் இன ஐக்கியம் என்பவற்றுக்குப் பாதகமானதாகவும் அமைந்திருக்கும் என்று எதிர்வு கூறியுள்ளது.
இத்தகைய நிலைமைகளைப் போக்கி சமாதானத்தை நிலைநிறுத்தும் நோக்கில் புதிய அரசாங்கத்தை தொடர்ச்சியான அழுத்தங்களின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை வழிப்படுத்த வேண்டும், நெறிப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக விழுமியங்கள் மற்றும் சிறுபான்மை இன மக்களின் அரசியல், மத சுதந்திர நிலைமைகளுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவ நாடுகளாகிய சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச நெருக்கடிக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
பல்லின மக்களையும் பல மதங்களையும் கொண்ட மக்கள் வாழ்கின்ற நாடாகிய இலங்கையில் பன்மைத்தன்மை கொண்ட ஆட்சி முறையைக் கையாள்வதற்கு பேரின அரசியல்வாதிகள் விரும்பவில்லை. நாடு அந்நியராகிய ஆங்கிலேயரின் பிடியில் இருந்து சுதந்திரம் பெற்ற கடந்த 72 ஆண்டுகளாக சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்கி பேரினவாதத்தை நிலைநாட்டுவதற்கும், சிங்கள பௌத்த தேசியத்தை நிலைநிறுத்துவதற்குமான அரசியல் நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளார்கள்.
இலங்கையை பேரின மக்கள் ஏகபோக அரசியல் மத உரிமைகளுடன் செல்வாக்குப் பெற்ற நாடாகவும், குறிப்பாக இதனை ஒரு பௌத்த நாடாகவும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் படிப்படியாகப் பேரினவாத அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு, படிப்படியாக வெற்றி பெற்று வருகின்றார்கள்.
அந்தப் பேரினவாத அரசியல் வழிப்போக்கில் முக்கியமான கட்டத்தில் – 2020 ஆம் ஆண்டில் இலங்கை காலடி எடுத்து வைத்துள்ளது. சமாதானத்தின் மீது பற்று கொண்டுள்ள சர்வதேச அமைப்பாகிய சர்வதேச நெருக்கடி குழு மட்டுமல்லாமல், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பண்புகள் மீது அக்கறையும் அதன் வளர்ச்சியில் கரிசனையும் கொண்டுள்ள சர்வதேச அமைப்புக்களும் சர்வதேச நாடுகளும் மரபு வழியில் ஜனநாயகப் பண்புகளைக் கொண்டிருந்த இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமாற்ற அரசியல் போக்கின் பக்கம் தமது பார்வையையும் கவனிப்பையும் செலுத்தி இருக்கின்றன.
இந்த நிலையில் சர்வதேச நெருக்கடி குழு எதிர்வு கூறியுள்ளவாறான நிலைமைகளுக்கு நாடு ஆளாகுமா அல்லது சமாதானம் தழைத்தோங்கி நாடு செழிப்படையுமா என்பதில் எதிர்வு கூறுவது கடினமான காரியமாகவே உள்ளது.