யாழ்ப்பாணத்தில் மீண்டும் திரைப்படப் பயிற்சிப்பட்டறை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, February 21, 2020

யாழ்ப்பாணத்தில் மீண்டும் திரைப்படப் பயிற்சிப்பட்டறை!

உலக ஓட்டத்தில் புதிதாக உருவாகி வரும் துறைகள் மட்டுமன்றி,  ஏற்கனவே உள்ள துறைகளிலும் அத் துறைசார்  புலமைத்துவம் பெற்றவர்களூடாக இளம் தலைமுறையினரைப் பயிற்றுவிப்பதன் மூலம் சமூகத்தில் படைப்பாற்றலையும் கண்டுபிடிப்பாற்றலையும் மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு  ‘பட்டறை’ ஆகும்.

இந்த வகையில், ‘பட்டறை’ முதலாவதாக திரைப்படப் பயிற்சிப் பட்டறை ஒன்றை தாயகத்தில் நடத்தவுள்ளது. இளவயதினரிடையேயும், மாணவர்கள் மத்தியிலும் தரமான திரைப்படங்களை உருவாக்கும் போக்கினை உற்சாகப்படுத்தவும், அவர்களை வழிகாட்டவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையோடு இணைந்து இத்திரைப்படப் பயிற்சிப் பட்டறையினை ஏப்ரல் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்   நடத்த ‘பட்டறை’ அமைப்பு  ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் முப்பது வருடங்களுக்கு அதிகமாக குறும்படங்கள் மற்றும் உலகத் திரைப்படங்களை தொடர்ச்சியாகத் திரையிடுவது மட்டுமின்றி, ஆறாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு திரைப்படப் பட்டறைகள் மூலம் பயிற்சிகளை வழங்கிய ‘நிழல்-பதியம்’ அமைப்பு மற்றும் தாயகத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த திரைக் கலைஞர்களையும் ஒன்றிணைத்துக் குறித்த திரைப்படப் பயிற்சிப் பட்டறை நடத்தப்படவுள்ளது.

தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நடத்தப்படவிருக்கும் இப்பட்டறையில் திரைப்படங்கள் சார்ந்த குறும்படம் மற்றும் ஆவணப்படம், நடிப்பு, திரைக்கதை, ஒப்பனை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய முக்கிய ஆறு விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும். 

இத்திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் பிரதான வளவாளர்களாகக் கலந்துகொள்ள
திரு. பிரசன்ன விதானகே (திரைப்பட இயக்குனர்)
செல்வி. ஹலிதா சமீம் (திரைப்பட ,யக்குனர் - சில்லுக்கருப்பட்டி)
ஆகியோர் இதுவரை சம்மதம் தெரிவித்துள்ளனர்.

பட்டறையின் இறுதிநாளில், பங்குபற்றிப் பயன்பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கலும், கலந்து சிறப்பித்த ஆசிரியர்கள், இதர கலைஞர்களைக் கௌரவிப்பதும் நடைபெறும். பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பெப்ரவரி 17ம் திகதி முதல்  ‘பட்டறை’ இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம். 

அவர்தம் ஆர்வம், படிப்பு அல்லது தொழில் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள்  தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும்,பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு  உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக எந்தவொரு கட்டணமும் அறவிடப்படமாட்டாது என்றும் ‘பட்டறை’ அமைப்பு அறிவித்துள்ளது.