மத்திய வங்கி மோசடிகாரர்களின் முகவர்களாகவே ஆட்சியாளர்கள் இருந்து வந்திருக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மத்திய வங்கி மோசடிகாரர்களின் முகவர்களகவே ஆட்சியாளர்கள் இருந்து வந்திருக்கின்றனர். அதனால் அர்ஜுன் மகேந்திரனுக்கோ அஜித் நிவாட் கப்ராலுக்கோ தண்டனை பெற்றுக் கொடுக்கப்போவதில்லை.
ஐக்கிய தேசிய கட்சி அர்ஜுன் மகேந்திரனை பாதுகாக்கவும் மொட்டு கட்சியினர் அஜித் நிவாட் கப்ராலையும் பாதுகாக்கும் வகையிலே நாடாளுமன்றத்தில் செயற்படுகின்றனர்.
முன்னாள் பிரதமரின் நெருக்கமனவராக அர்ஜுன் மகேந்திரன் இருந்தார். அதனால் அரஜுன் மகேந்திரன் அவரது உறவினர்களுக்கு மத்திய வங்கி பிணைமுறிகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்தார்.
அதபோன்று மஹிந்த ராஜபக்ஷவிற்கு நெருக்கமான அஜித் நிவாட் கப்ரால் அவரது சொந்தக்காரர்களை மத்திய வங்கி பிணைமுறி வழங்கும் நிறுவனங்களுக்கு நியமித்து பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டார்.
இந்த மோசடிக்காரர்கள் எப்படி தனவந்தர்களாக மாறினார்கள் என தேடிப்பார்த்தால், எமது நாடு எவ்வாறு வறுமை நிலைக்கு சென்றது என்பதை அறிந்துகொள்ளலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.