நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குரல் பதிவில் பிரதமரினதும், முன்னாள் ஜனாதிபதியினதும் குரல் பதிவுகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எனது குரல் பதிவுகள் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கும் தினத்தை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.
மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்துக்கு வந்த உறுப்பினர்களின் செயற்பாடுகள் அவர்கள் மேற்கொண்ட சேவைகள் தொடர்பாக அறியும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது.
அதன் பிரகாரம் நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள குரல் பதிவுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டு குரல் பதிவுகள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒரு குரல் பதிவு, இராஜாங்க அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவின் ஒரு குரல் பதிவு, இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி ஆஷா அளுத்கமகேவின் இரண்டு குரல் பதிவுகள் உள்ளன.
அதேபோன்று அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்சவின் ஒரு குரல்பதிவு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் ஒரு குரல் பதிவும் உள்ளடங்கி இருக்கின்றன. இந்த குரல் பதிவுகள் எதிலும் தூசன வார்த்தைகள் இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.