நேற்றையதினம் (20.02.2020) யாழ்ப்பாணத்தில் உள்ள வலம்புரி தமிழ் தினசரி ஊடக பணிமனைக்கு வருகை தந்த ஒரு குழுவினர் அந்த ஊடகத்தினரை அச்சுறுத்தும் வகையில் கூட்டாக செய்யப்பட்டமை வருந்தத்தக்கதும் கடும் கண்டனத்துக்கும் உரியதுமாகும்.
இவ்வாறு வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று (21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும்,
ஒரு ஜனநாயக நாட்டில் ஊடக சுகந்திரம் என்பது மிக முக்கியமான உரித்தாகும் ஊடகங்களில் வெளிவரும் செய்திகளில் கருத்து வேறு பாடு எழுவது இயல்பானது அவற்றில் அதிருப்தி அடைபவர்கள் அவற்றுக்கு எதிராக ஜனநாயக வழிமுறையில் செயல்படுவதற்கு பல மார்க்கங்கள் இருக்கின்றன.
குறிப்பாக அந்த ஊடகத்திற்கே தமது ஆட்சேபனையை அல்லது அதிருப்தியை தெரிவிக்கலாம். அல்லது பொதுவான ஊடக அறிக்கையை வெளியிடலாம். அதற்கு மேலாக பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யலாம். அதை விடுத்து அச்சுறுத்தல் பாணியில் வன்முறை மார்க்கத்தில் அதிருப்தியை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.
இவ்வாறான செயல்பாடுகள் இந்த மண்ணின் ஊடக சுகந்திரத்திற்கு விடுக்கப்படுகின்ற சவாலாகவும் ஒரு தவறான முன்னுதாரணமாகவும் அமைகின்றது. எனவே இதில் சம்பந்தபட்டவர்களுக்கு எதிராக முறைப்படியான சட்டரீதியான நடவடிக்கையை காவல் துறையினர் எடுப்பது மிகவும் அவசியம் என வலியுறுத்தப்படுகின்றது. - என்றுள்ளது.