காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் – உறவுகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, February 27, 2020

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் – உறவுகள்!


காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் என்பதனை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 25ஆம் திகதி மன்னார் மனித புதை குழி தொடர்பாக இடம்பெற்ற வழக்கு விசாரணை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இடம் பெற்றது.

இதன்போது மன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்றால் யார்? என்று கேட்டார். சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட நாங்கள் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.

மன்னார் மனித புதை குழி வழக்கு விசாரணைகள் கூட மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பெயரில் இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக எனது பெயரிலும் வழக்கு விசாரனைகள் இடம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் குறித்த அரச சட்டத்தரணி என்ன நோக்கத்திற்காக இவ்வாறு கேட்டார் என்று தெரியாமல் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் 4 வருடங்களாக வீதியில் நின்று போராடிக்கொண்டு இருக்கின்றோம்.

எத்தனையோ போராட்டங்கள், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு விதமாக நாங்கள் அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என காட்டிக் கொண்டு இருக்கின்றோம்.

எங்களுடைய பிள்ளைகள் எங்கே என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். அவ்வாறு இருக்கின்ற நிலையத்தில், கூட மன்னார் நீதிமன்றத்தில் வைத்து கடந்த 25ஆம் திகதி அரச சட்டத்தரணி ஒருவர் பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்று கேட்கின்றார்.

குறித்த சட்டத்தரணி இவ்வளவு காலமும் இலங்கையில் இருக்கவில்லையா? இலங்கையில் என்ன நடக்கின்றது என்று இவருக்கு தெரியாதா?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான நாங்கள் ஆயிரக்கணக்கான நாட்கள் வீதியில் நின்று போராடிக் கொண்டு இருக்கின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.