தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்க முடியாது- சி.வி.விக்னேஸ்வரன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 29, 2020

தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்க முடியாது- சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் செயற்படப்போவதில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றீர்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “ நாம் அமைத்திருக்கும் கூட்டணி பலமானது. எமது புரிந்துணர்வு உடன்படிக்கையை நாம் வெளியிட்டுள்ளோம். எமது செயற்பாடுகள் எவ்வாறு இருக்கப்போகின்றன என்பது பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இவை வெறும் வார்த்தைகள் அல்ல.

கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் நாம் செயற்படமாட்டோம். உலகம் பூராகவும் பரந்துவாழும் எமது மக்கள் மத்தியில் பல மேதைகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள். அவர்களை எல்லாம் உள்வாங்கி நாம் செயற்படவேண்டும்.

நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையில் நாம் செயற்படவேண்டும். இவற்றை நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் ஊடாகவே நாம் முன்னெடுக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். தாமதம் ஆனாலும் இவற்றை நாம் செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டிருக்கின்றோம்.

அரசாங்கத்தில் தங்கி இருக்காமல் எமது அபிவிருத்தியை எப்படி நாம் முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பாகவும் அறிஞர்கள், புத்திஜீவிகளை ஒன்றிணைத்து எமது அரசியல் இராஜதந்திர செயற்பாடுகளை எப்படி முன்னெடுக்கலாம் என்பது குறித்தும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.

ஆகவே, எமது அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளுக்காக அரசாங்கங்களிடம் சரணாகதி அடைந்து மண்டி இடாமலும் தனி ஒருவரின் மூளையில் தங்கியிராமலும்  நிறுவனமயப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம்.

இந்த அடிப்படையிலேயே இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வை அடைவதற்கான எமது அணுகுமுறை வேறுபடுகிறது. எமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான இந்த அணுகுமுறை அடிப்படையிலேயே நாம் ஏனைய அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபடுகின்றோம்.

அதாவது, வெறும் வார்த்தை ஜாலங்களால் தமிழ் தேசியம் மலரும் என்று நாம் நினைக்கவில்லை. மற்றவர்கள் மீது சதா குற்றம் சொல்லி வருவதால் தமிழ் தேசியம் மலரும் என்று நாம் நினைக்கவில்லை. அல்லது அரசாங்கத்திடம் மண்டி இடுவதால்  தீர்வு வரும் என்றும் நாம் நம்பவில்லை. அத்துடன் தனி ஒருவரின் புத்தியும் உழைப்பும் மட்டும் பலாபலன்களைக் கொண்டுவரும் என்றும் நாம் நம்பவில்லை.

இந்த அடிப்படையில் தான் நாம் எம்மை ஒரு மாற்று அணியாகக் காண்கின்றோம். எமது தாரக மந்திரம் வித்தியாசமானது. அரசியலில் தன்னாட்சி, சமூக ரீதியாக தற்சார்பு, பொருளாதாரத்தில் தன்னிறைவு காண்பதே எமது குறிக்கோள். மக்கள் எமது தனித்துவத்தை தெளிவாகப் புரிந்துகொண்டு எம்மை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று நாம் நம்புகின்றோம்.  எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் தயாரித்து வருகிறோம். விரைவில் வெளியிடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.