பொதுத்தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் அச்சம் கொள்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஓய்வூதியம் எதிர்பார்த்து நிற்கும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அந்த ஓய்வூதியப் பணம் கிடைக்காமல் போகும்.
இந்நிலையில் அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைப்பது சிறந்ததா அல்லது இல்லையா என்பது தொடர்பாக ஐ.தே.க.வினருக்குள் கலந்துரையாடலொன்று இடம்பெறுகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதிக்குள் நாடாளுமன்றத்தை கலைத்தால், ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வரும்போது தேர்தல் இடம்பெறும்
ஆனாலும் அதற்கு முன்னர் ஏப்ரல் 21 வருகின்றது. அதன்போது சஹரானின் கதை வெளியே வந்துவிடும். இதனூடாக தமது தேர்தல் நடவடிக்கைக்கும் பாதிப்பு ஏற்படுமென ஐ.தே.க.வினர் அஞ்சுகின்றனர்.
இதனால் நாடாளுமன்றத்தை விரைவாக கலைத்து, ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டுமென்ற எண்ணம் ஐ.தே.க.வினரிடம் காணப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக உத்தியோகப்பூர்வமற்ற முறையில் அரசாங்கத்துக்கும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இவ்விடயம் தொடர்பாக அடுத்து நடைபெறவுள்ள கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்