முல்லைத்தீவில், தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட ஏறத்தாழ 3744 ஏக்கர் காணிகளை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அபகரித்துள்ளது. அத்துடன் அருகிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டு தற்போது இந்தக் காணிகளின் மூன்று மடங்காக 11,232 ஏக்கர் காணிகள் மகாவலி (எல்) என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு, சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய குளக்காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டதாகவும் அவ்வாறு மாற்றுக் காணியாக வழங்கவுள்ள மானாவாரி விவசாய நிலங்களும், ஏற்கெனவே தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தால் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இக்காணிகள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சில கருத்துகளைச் சபையில் தெரிவித்திருந்தார்.
பிரதமரின் அக்கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில், நேற்று இரவு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடகச் சந்திப்பொன்றை தனது அலுவலகத்தில் நடத்தியிருந்தார். அந்த ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், “கடந்த 05.02.2020ஆம் திகதியன்று நாடாளுமன்றில், மகாவலி (எல்) காணிகள் தொடர்பிலான நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் கேள்விக்கு, பிரதமர் மஹிந்த பதிலளித்த விதம் வேடிக்கையாக இருக்கின்றது.
1984ஆம் ஆண்டு எம்முடைய மக்கள், கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணியில் இருந்து, வலுக்கட்டாயமாக இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டிருந்தனர். பின்னர் அம்மக்கள், 2011ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், தமது பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்டனர். அப்போது அம்மக்களுடைய பூர்வீக வாழ்வாதார நிலங்கள் முழுமையாகச் சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளின் புள்ளி விவரங்களைப் பொறுத்தவரையில், கிட்டத்தட்ட 3,744 ஏக்கர் காணிகள் அங்கு அபகரிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த, இக்காணி விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துத் தெரிவிக்கும்போது, 408 ஏக்கர் காணிகள் அதில் 103 பேர் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர்.
சிங்கள மக்களுக்கு அக்காணிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை எனத் தனதுரையின் முற்பகுதியில், பிரதமர் கூறியிருந்தார். தொடர்ந்து அவருடைய கருத்தில் சிங்கள மக்களுக்குக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் நிச்சயமாக, நெலும்வெவ என்ற குளத்தைப் பற்றி மாத்திரம்தான் அவர் சொல்லியிருக்கின்றார் என நான் எண்ணுகின்றேன். அதுவும் பொய்யான தகவலாகும்.
மாவட்டச் செயலகப் புள்ளிவிவரத்தின்படி, உந்தராயன் குளத்தின் (நெலும்வெவ) கீழ் 264, அமையன் குளம் (கிரிஇப்பன் வெவ) தமிழ் மக்களின் பராமரிப்பில் இருந்தபோது 360 ஏக்கர், அடையக்கறுத்தான் 75 ஏக்கர், சாம்பல்குள வயல் 300 ஏக்கர் என, குளத்தின் கீழான சுமார் 899 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.
ஆமையன்குளம் சம்பந்தமாக ஒரு புள்ளிவிவரத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். குறித்த ஆமையன் குளம் (கிரிஇப்பன் வெவ) 103 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட நிதியில் அக்குளம் மறுசீரமைக்கப்பட்டு, முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேரடியாக இங்கு வந்து, அக்குளத்துக்கு கிரிஇப்பன்வெவ எனப் பெயர் மாற்றம் செய்து, சிங்கள மக்களின் பாவனைக்காகக் கையளித்திருந்தார்.
இக்குளத்தின் கீழ், தமிழ் மக்கள் 360 ஏக்கர்களில் தான் பயிர்ச்செய்கை மேற்கொண்டிருந்தனர். 900 ஏக்கர் வரையில் நீர் பாய்ச்சக்கூடிய அளவுக்கு குளம் தற்போது மறுசீரமைக்கப்பட்டு உள்ளதுடன், காடுகள் அழிக்கப்பட்டு, 900 ஏக்கர் வரையில் காணிகள் எடுக்கப்பட்டு, சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இவ்வாறாக அபிவிருத்தி என்ற போர்வையில், தமிழ் மக்கள் ஏற்கெனவே பயிர்செய்கையில் ஈடுபட்ட காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன், அருகே உள்ள எமது காட்டு வளங்கள் அழிக்கப்பட்டு மேலதிகமான காணி அபகரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கும் ஒரு திட்டமாகத்தான் அங்கு நடைமுறைப்படுத்திக்கொண்டு வருகின்றனர்.
எமது மக்கள் கடந்த காலங்களில் ஏறத்தாள 3,744 ஏக்கர் காணிளில்தான் பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்தனர். அக்காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன், அருகிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டு தற்போது இந்த காணிகளின் மூன்று மடங்காக 11,232 ஏக்கர் காணிகள் மகாவலி (எல்) என்ற பெயரில் அபகரித்து வைத்துள்ளனர் என்பதுதான் உண்மை.
எனவே, பிரதமர் கூறிய புள்ளிவிவரங்களும் கருத்துகளும் பொய் என இதில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நிச்சயமாக எமது மக்களுடைய காணிகள் யாருக்கு எவ்வளவு ஏக்கர், யார் அந்தக் காணிகளுக்கு உரிமையாளர்களாக உள்ளனர் போன்ற சகல ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.
இக்காணிகளை அபகரிப்புச் செய்வதை விடுத்து, தமிழ் மக்களுக்குரிய காணிகள் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாகும். இது ஒரு புறமிருக்க, 25.06.2018ஆம் திகதி, கமநலச் சேவைத் திணைக்களத்தினூடாக மாவட்டச் செயலகம் வெளியிட்ட புள்ளிவிவரத்திலும், நான் குறிப்பட்ட இந்தக் காணி புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு அரச திணைக்களங்களாலும் இவ்வாறான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ள போதும், பிரதமர் இவ்வாறான பொய்த் தகவல்களை வெளியிடுவது அழகல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளை, பிரதமர் மாற்றுக் காணி வழங்குவது தொடர்பிலும் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இந்த மாற்றுக் காணிகள் என்ற விடயத்தில், ஏற்கெனவே குளத்தோடு பயிர்ச்செய்கை செய்துவந்த தமிழ் மக்கள், தற்போது மானாவாரி ஆதாவது மழையை நம்பி பயிர்ச் செய்கையில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். அதுவும் ஒரு குறுகிய நிலப்பரப்பில், விவசாயம் செய்துவருகின்றனர்.
தமிழ் மக்கள் கடந்த காலங்களில், பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட குளங்களோடு சேர்ந்த வயல் நிலங்கள், பாரிய அளவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதாவது, முன்பு 1 ஏக்கர் எனில், தற்போது அதை மூன்று ஏக்கர் அளவிற்கு விருத்தி செய்து, குளங்களும் அதற்கு ஏற்றால் போல் பெரிதாக்கப்பட்டு, மறுசீரமைக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கும் வேலைகள் கச்சிதமாக இடம்பெறுகின்றன.
இந்த விடயத்துடன் ஒப்பிடும்போது, தமிழ் மக்களுக்கு மாற்றுக்காணி எங்கு தரப்போகின்றனர். மாற்றுக்காணி என்று கூறிக்கொண்டு குளத்தோடு உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துள்ளனர்.
மானாவாரிக் காணிகள்தான் மற்றுக் காணிகளாக வழங்கப்படும் என்ற நிலையிலும், காடுகளை அழித்துத்தான் அந்தக் காணிகளை தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற நிலையிலும் இருந்தால் மழையை நம்பித்தான் பயிர்ச்செய்கையில் ஈடுபடவேண்டும் என்ற நிலைக்கு எமது தமிழ் மக்கள தள்ளப்படுகின்றனர்.
ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் இரண்டு ஏக்கர் மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என நிர்ப்பந்தப்படுத்தி, மாற்றுக் காணிக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆனால், அவ்வாறு மாற்றுக்காணியாக வழங்கப்படும் என்ற அந்தக் காணிகள் கூட, ஏற்கெனவே அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு 4-5 ஏக்கர் வரையில் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள்தான். அதற்கான ஆவணங்கள் தமிழ் மக்களிடம் உள்ளன.
அப்படியாக இந்த மாற்றுக்காணியாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட காணிகளும், 625 தமிழ் பயனாளிகளுக்குரிய காணிகள்தான் இக் காணிகளாகும். இவ்வாறிருக்க அக்காணிகளை இரண்டு ஏக்கர் வீதம் மாற்றுக்காணியாக மீண்டும் தமிழ் மக்களுக்கு வழங்குவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.
அந்த 625 பயனாளிகளின் காணிளை விட, 825 ஏக்கர் காணிகள் தோட்டச் செய்கைக்காக கோட்டைக்கேணி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள காணிகளை அபகரித்து ஒருவருக்கு தலா 25 ஏக்கர் வீதம், 33 சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிங்கள மக்களுக்கு 25 ஏக்கர் வீதம் காணிகளை வழங்கிவிட்டு, ஏற்கனவே தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளை, மீண்டும் தமிழ் மக்களுக்கு இரண்டு ஏக்கர் வீதம் வழங்குகின்றோம் என்று சொன்னால் அதைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
தமிழ் மக்களுடைய இந்தக் காணிகள் அனைத்தும் அவர்களுக்கே சேரவேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கையாக உள்ளது. எமது தமிழ் மக்கள் கடந்த பத்து வருடமாக இந்த காணிகளுக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக அந்த மக்கள் தொடர்ந்தும் போராடத்தான் போகின்றனர்.
ஆனால் இந்த தமிழ் மக்களுக்கு இரண்டு ஏக்கர் மாற்றுக்காணி வழங்கும் நடைமுறை ஏற்றுக்கெள்ள முடியாது. சிங்கள மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் தமிழ் மக்களுக்கு வேறு மாதிரியான காணி வழங்கல்கள் என்ற நிலையை மாற்றி, நிச்சயமாக எமது தமிழ் மக்களுக்குரிய சொந்தக் காணிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
குளங்களின் கீழான தமிழ் மக்களின் வயல் நிலங்களை அத்துமீறி அபகரித்துவிட்டு, மானாவாரிக் காணிகள் வழங்கும் நடவடிக்கையினை செய்ய வேண்டும்.
குளங்களின் கீழான தமிழ் மக்களின் காணிகள் வழங்கப்படுவதுடன், மானாவரிக் காணிகளிலும் தமிழ் மக்களுக்குரிய காணிகள் வழங்கப்பட வேண்டும். மேலும், சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழ் மக்களின் இக் காணிகள், நிச்சயமாக அவர்களிடமிருந்து மீளப்பெற்று, எமது மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாகவுள்ளது” என்றார்.