“டேய் வாடா.. வாடா.. செருப்பை கழற்றுடா”: சிறுவனைக் கூப்பிட்டு காலணியைக் கழற்ற வைத்த அமைச்சர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, February 7, 2020

“டேய் வாடா.. வாடா.. செருப்பை கழற்றுடா”: சிறுவனைக் கூப்பிட்டு காலணியைக் கழற்ற வைத்த அமைச்சர்!

முதுமலையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க விழாவுக்குச் சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவனைக் கூப்பிட்டு காலணியை கழற்ற வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னவென்ட் திவ்யா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நடந்து சென்ற போது அவரது செருப்பு புல்வெளியில் சிக்கிக் கொண்டது. புல்வெளியில் மாட்டிக்கொண்ட தனது செருப்பை கழற்றுமாறு அங்கு நின்று கொண்டிருந்த ஆதிவாசி சிறுவனை அழைத்தார் சீனிவாசன்.

“டேய் வாடா.. வாடா.. செருப்பை கழற்றுடா” என்று அங்கு நின்று கொண்டிருந்த சிறுவனை அழைக்க, அந்த சிறுவனும் அமைச்சரின் காலணியை கழற்றி மாட்டிவிட்டார். இந்த சம்பவத்தின் போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவும் உடன் இருந்தார்.

இந்தக் காட்சி தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பானதை அடுத்து, இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, காலணியை கழற்றச் சொன்ன விவகாரம் குறித்து, தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காலணியை கழற்றச் சொன்னதில் எந்த உள்நோக்கமும் இல்லை. என் பேரன் வயதில் இருந்த சிறுவன் என்பதால்தான் அவனை அழைத்து காலணியைக் கழற்றச் சொன்னேன். பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் சிறுவனை அழைத்தேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறன் என்று கூறியுள்ளார்.