சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தொலைபேசி உரையாடல்கள் குறித்து ரஞ்சன் விளக்கம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 7, 2020

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தொலைபேசி உரையாடல்கள் குறித்து ரஞ்சன் விளக்கம்

மாஃபியா’ திரைப்படங்களைப் பார்த்தே தான் தொலைபேசி குரல் பதிவுகளை ஒலிப்பதிவு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் கசிந்துள்ள சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாஃபியா திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு, சில ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெறுவதற்கு வெவ்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தியதாக தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான விடயங்கள் குறித்து பல உயர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுடன் பேச வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல நபர்கள் சம்பந்தப்பட்ட மோசடி மற்றும் ஊழல் குறித்த விபரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சரியான நேரத்தில் அவர்களை அம்பலப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதன்போது, குற்றப்புலனாய்வு திணைக்களம், நிதிக் குற்றப் பிரிவு மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகளுக்கு தேவையானது என சந்தேகிக்கப்படும் பல இறுவட்டுக்கள் அவரின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டன.

இதனையடுத்து முன்னைய ஆட்சியின்போது குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான குரல் பதிவுகள் அனைத்தும் பகிரங்கமாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.