நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வெளியானதால் நடிகை பியூமி ஹன்சமாலி நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ரஞ்சன் போன்ற அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டதற்கு வருத்தம் அடைவதாக அவரது சமூக வலைப்பின்னல் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இந்த குரல்களால், பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதன்போது பல இறுவட்டுக்கள் அவரின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து முன்னைய ஆட்சியின்போது குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான குரல் பதிவுகள் அனைத்தும் பகிரங்கமாகியிருந்தன.
இவ்வாறு முக்கிய பிரமுகர்கள் பலரின் குரல் பதிவுகள் பகிரங்கமாகி வருகின்ற நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலியும் குறித்த குரல் பதிவு காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.