கனடாவின் கியூபெக் மாநிலத்தில் உள்ள தமிழ் உறவுகளால் உருவாக்கப்பட்ட மொன்றியல் Fruits haby பழக்கடை நிதியுதவியுடன் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 12 முன்னாள் போராளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் 12 இலட்சம் ரூபாய் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி உருத்திரபுரம் ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் அருட்தந்தை யூட் அமலதாஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது உரையில், புலம்பெயர் சமூகத்தினர் எமக்கு ஆயுதப்போராட்டம் நடந்த காலங்களிலும் சரி அதன் பின்னரான காலத்திலும் எமக்கு பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். கடுமையான குளிர்காலங்களில் தங்கள் இரத்தங்கள் உறைந்த நிலையிலும் வேலை செய்து எமது தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்கிற அவாவுடன் செயற்பட்டு வருகிறார்கள்.
Fruits haby நிறுவனத்தினர் கல்விக்காக ஏங்கும் பல மாணவர்களுக்கு மாதாந்தம் உதவி வருகிறார்கள். தற்போது தாயகவிடிவிற்காக போராடிய முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இவர்கள் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. தமிழர்களை மதரீதியாக கூறுபோட சில சக்திகளால் முயற்சிகள் நடைபெறுகிறது.ஆனால் தமிழர்கள் அதை ஒருமித்த சக்தியாக முறியடிப்பார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, விடுதலைப் புலிகளின் மூத்த போராளி காக்கா, கிளிநொச்சி சின்மயா மிசன் சுவாமிகள், முன்னாள் அதிபர் சோதிநாதன், கனகபுரம் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.