ரணிலை கைது செய்ய தொடரும் நெருக்கடி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 8, 2020

ரணிலை கைது செய்ய தொடரும் நெருக்கடி!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து அவரிடமே மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல – நெலும்மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்தியவங்கி பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபரான அர்ஜூன மகேந்திரனை திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்குச் செல்வதாகக் குறிப்பிட்டு, அவரை நாட்டிலிருந்து வெளியேற உதவியவர் ரணில் விக்கிரமசிங்கவே எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனவே பிரதான சந்தேகநபர் இல்லாததால் அவர் வெளியேறுவதற்குக் காரணமாக இருந்த ரணில் விக்ரமசிங்கவையே கைதுசெய்து விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட முறைக்கேடுகள் தொடர்பாக தற்போது சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இந்நிலையில் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பாக அவருக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை எடுக்காது, அதனுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் இதன்போது டிலான் பெரேரா கூறினார்.