எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையினை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அண்மையின் கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
அதேவேளை தற்போதைய கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா ஆகியோர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தேர்தலில் தோற்கடிக்கப்படலாமென்ற அச்சத்தாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சுரேஸ்பிறேமச்சந்திரன் போன்றவர்கள் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையிலேயே மாவை சேனாதிராசா இம்முறையும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் பொங்கல் பானை என்பதை பொங்கல் தினமான இன்று விக்கினேஸ்வரன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.