ரணில்- சஜித்- கரு இன்று சந்திப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, January 20, 2020

ரணில்- சஜித்- கரு இன்று சந்திப்பு!


ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீவிரம் பெற்றுள்ள தலைமைத்துவ பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் இன்று கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் சந்தித்து பேசவுள்ளனர்.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பநிலையை  தீர்ப்பதற்கான கடைசி நம்பிக்கை, இன்றைய சந்திப்பு என ஐ.தே.க வட்டாரங்கள், இந்த சந்திப்பு குறித்து மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எனினும், இன்று பிரச்சனைகள் தீர்க்கப்படும் வாய்ப்பிருப்பது கேள்விக்குறியே. ரணிலின் தலைமைத்துவத்தின் கீழ் இனி தேர்தலில் களமிறங்கும் எண்ணம் சஜித் தரப்பிடம் இல்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மை தோற்கடிக்க ரணில், மஹிந்த தரப்புடன் இரகசிய பேச்சில் ஈடுபட்டு, தமக்கு எதிராக காய் நகர்த்தியதாக சஜித் தரப்பு தீவிரமாக நம்பி வரும் நிலையில், ரணிலின் தலைமைத்துவத்தை அவர்கள் ஏற்பதில்லையென்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

அதேபோல, கட்சித் தலைமையை விட்டுக் கொடுப்பதில்லையென்ற நிலைப்பாட்டில் ரணில் இருப்பதால், இன்று முடிவெதுவும் எட்டப்படும் வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.

இதேவேளை, சஜித் பிரேமதாச தரப்பினர் விரைவில் ஜேவிபியுடனும் பேச்சு நடத்தவுள்ளது. சஜித் தலைமையிலான கூட்டணி பணிகள் எதிர்வரும் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகிறது.

சஜித் பிரேமதாச மற்றும் சில ஐ.தே.க தலைவர்கள் சபாநாயகர் கரு ஜெயசூரியாவைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.