யுத்தத்தின்போது உயிரிழந்த பிள்ளைகளைத் தாங்கள் கேட்கவில்லை எனவும் உயிருடன் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளையே கேட்பதாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டுமென மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எமது பிள்ளைகளும் உறவுகளுமே. ஆனால் தற்போது புதிய அரசாங்கம் வந்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரும் இல்லை என ஜனாதிபதி கூறுகின்றார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இல்லையென்றால் அவர்கள் எங்கே என்பது அவருக்குத்தான் தெரியும். அவர்களுக்கு என்ன நடந்தது? என்ன செய்தார்கள் என்பதும் அவருக்கே தெரியும். அவருடைய காலத்திலேயே உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிள்ளைகளே காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தின் போது உயிரிழந்த பிள்ளைகளை நாங்கள் கேட்கவில்லை. இறந்த உறவுளைக் கேட்டு நாங்கள் போராடவில்லை. உயிரோடு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைக் கேட்டே நாங்கள் போராடுகின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கேட்டே நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். அரசாங்கம் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். அவருடைய ஆட்சிக் காலத்திலே பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பிடித்துச் செல்லப்பட்டனர்.
இவர் கூறியதாலேயே அனைத்துமே நடந்துள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்பியிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரும் இல்லை என்று கூறியுள்ளார். பிடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகள் எங்கே என்று இவருக்குத் தெரியும்.
இவருடைய ஆட்சியிலேயே நடந்துள்ளது. எங்களுடைய பிள்ளைகள், உறவுகள் எங்கே என்று தான் நாங்கள் கேட்கின்றோம். எமது பிள்ளைகள் என்ன நிலையில் இருந்தாலும் பரவாகயில்லை.
நீங்கள் பிடித்துக்கொண்டு போன எங்கள் பிள்ளைகளும், உறவுகளும் உங்களிடம் இருக்கின்றார்கள் எனக் கூறியதன் நம்பிக்கையிலேயே நாங்கள் இருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என்ன நிலையில் இருந்தாலும் எங்களிடம் ஒப்படையுங்கள். தற்போது கூட புலனாய்வுத் துறையினரால் (சி.ஐ.டி) எங்களுக்குப் பிரச்சினையாகவே உள்ளது. காலை நேரத்தில் வீடுகளுக்கு வருகின்றனர்.
அவர்களின் முகங்களிலே நாங்கள் முழிக்க வேண்டியதாக இருக்கின்றது. இன்று எங்கே போகின்றீர்கள்? என்ன கலந்துரையாடல் உள்ளது?எப்போது ஜெனிவாவிற்கு போகின்றீர்கள் எனக் கேள்வி கேட்கின்றனர். இவர்கள் ஏன் எங்களை விசாரணை செய்ய வேண்டும்? இவர்கள் எங்களை விசாரணை செய்யவேண்டிய அவசியமில்லை.
எங்களை அவர்கள் விசாரணை செய்கின்றார்கள் என்றால் நாங்கள் அவர்களிடம் கேட்கின்றோம் காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய பிள்ளைகளை மீண்டும் உங்களுடன் கொண்டு வந்து தந்தீர்கள் என்றால் நாங்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்கின்றோம், ஜெனிவா செல்லப் போகின்றோம்? நாங்கள் எங்கும் போக வேண்டிய அவசியம் இல்லை.
எனவே காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை ஜனாதிபதியே கொண்டு வந்து தரவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.