மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை மத தலைவர் ஊடாக கையளிப்பதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தமக்கு தெரிவித்ததாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் சிலை உடைக்கப்பட்டதன் பின்னர் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியினால் அழைப்பு மேற்கொள்ளப்பட்டதா என ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பூஜித் ஜயரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதன்போது, பூஜித் ஜய சுந்தர, முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தமக்கு அழைப்பை மேற்கொண்டமையை ஏற்றுக்கொண்டார்.
அத்துடன் மாவனெல்லை புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பாக தமக்கு தெரியுமெனவும் அவர்களை கைது செய்வதற்கு உதவி புரிவதாகவும் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் குறித்து அசாத் சாலி தகவல் வழங்கியதாகவும் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் மத தலைவர் ஊடாக கையளிப்பதாக அசாத் சாலி கூறியதாகவும் பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று தெரிவித்துள்ளார்