கோட்டாவையும் மஹிந்தவையும் பிரிக்க முயற்சி – நாமல் குற்றச்சாட்டு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, January 25, 2020

கோட்டாவையும் மஹிந்தவையும் பிரிக்க முயற்சி – நாமல் குற்றச்சாட்டு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் பிரிக்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்த செயற்பாட்டில் அவர்களால் வெற்றியடைய முடியாது என்று குறிப்பிட்டார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றமொன்றில் பெரும்பான்மையான உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள பேரம் பேசுதலை நாம் மேற்கொண்டால், நிச்சயமாக பலமானதொரு அரசாங்கத்தை எம்மால் ஸ்தாபிக்க முடியாமல் போய்விடும்.

இறுதியில் வில்பத்துவை சுத்தம் செய்தவர்கள் செய்த அரசாங்கத்தைப் போல்தான் அது காணப்படும்.
இதுதான் உண்மையாகும். எனவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பலமானதொரு அரசாங்கத்தை நாம் ஸ்தாபிக்க வேண்டும்.

இதற்கான அதிகாரம் மக்களிடம்தான் உள்ளன. இதனை மேற்கொள்ள நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும்.

19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பலமானதொரு நாடாளுமன்றம் இருந்தால் மட்டுமே, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். இல்லையென்றால், பின்நோக்கித்தான் நாம் நகரவேண்டியேற்படும்.

தற்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நல்லவர் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மோசமானவர் என்றும் கூறுகிறார்கள்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தின்போது மஹிந்த நல்லவர் கோட்டா மோசமானவர் என்று கூறினார்கள். அமெரிக்க கடவுச்சீட்டை வைத்திருந்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாக விமர்சித்தார்.

இன்று இதுதொடர்பாக எல்லாம் எவரும் கருத்து தெரிவிப்பதில்லை. எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என ஐக்கிய தேசியக் கட்சிக்கு நன்றாகத் தெரியும்.

இதனால்தான் இவ்வாறான கதைகளைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருப்பாராயின், அந்த அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவே இருக்க வேண்டும் என மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்.

இதனை ஐக்கிய தேசியக் கட்சியினர் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். இப்போது, கோட்டாவும் மஹிந்தவும் ஒருவருக்கொருவர் கோபமாக உள்ளார்கள் என்று கூறி வாக்குகளை பெற்றுக்கொள்ளவே இவர்கள் முற்படுகிறார்கள்.

ஆனால், இவர்கள் இருவரையும் பிரிப்பது ஒன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவ்வளவு எளிதான விடயமல்ல. சஜித் பிரேமதாஸவின் அப்பாவும் அந்தக் காலத்தில் இந்த செயற்பாட்டை மேற்கொண்டு தோல்வியடைந்தார். எனவே, சஜித் பிரேமதாஸவுக்கும் ஒருபோதும் இவர்களுக்குள் பிளவினை ஏற்படுத்த முடியாது” என மேலும் தெரிவித்தார்.