வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் எதிர்வரும் 30ஆம் திகதி மாபெரும் போராட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அவர்கள், “எதிர்வரும் 30ஆம் திகதி காலை 10 மணிக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி பேரணியொன்றை வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கவுள்ளோம்.
குறித்த போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தகர்கள், பேருந்து உரிமையாளர்கள் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கட்சி பேதமின்றி அணிதிரண்டு உங்கள் ஆதரவினையும் பங்களிப்பினையும் நல்குமாறு கேட்டுநிற்கின்றோம்.
போரின்போது இடம்பெற்ற விடயங்களை நாம் கோரவில்லை. போர் முடிவடைந்த பின்னர் ஓமந்தையிலும் வட்டுவாகலிலும் இராணுவத்திடமே எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். அத்துடன் வவுனியா, மன்னாரில் அரச கட்டுப்பாட்டு பகுதிகளிற்குள் எமது உறவுகள் காணாமல்போக செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களை புலிகள் பிடித்துசென்றதாக கூறுகின்றமை எப்படி சாத்தியமாகும்” என கேள்வியெழுப்பினர்.