எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை… எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்” சம்பந்தன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 22, 2020

எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை… எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்” சம்பந்தன்

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தொடர்ந்து தங்குவதற்கான எந்தவொருக் கோரிக்கையையும் அரசாங்கத்திடம் தான் விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “2015 செப்டெம்பர் மாதம் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் என்னை அங்கீகரித்தீர்கள். அப்போது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருபது வருடங்களுக்கு மேலாக நான் வசித்து வந்தேன்.

அந்த வீட்டில் ஒவ்வொரு முறையும் நுழையும் போதும் வெளியேறும் போதும் 60 – 70 படிகள் ஏறி இறங்கினேன். எனது வயது முதிர்வினால் எனக்கு 80 வயதிற்கு மேலாகிறது. இது மிகவும் அசௌகரியமாகவும் சிரமமாகவும் இருந்தும் நான் அதனைத் தாங்கிக் கொண்டேன்.

நான் எதிர்க்கட்சித் தலைவராகி இரண்டு வருடங்கள் கழிந்த பின்னர் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலேயே எதிர்க்கட்சித் தலைவருக்குரிய வீடு எனக்கு வழங்கப்பட்டது. எனவே, இரண்டு வருடங்களின் பின்னர், 2017 செப்டெம்பர் மாதத்திலேயே நான் அந்த வீட்டில் குடிபுக கூடியதாகவிருந்தது.

எனக்கான ஒரு வீட்டை அவர்கள் தேடியபோது, நான் ஒரு வீட்டை வாடகைக்குப் பெறலாம் என்று முன்னாள் ஜனாதிபதி ஆலோசனை தெரிவித்தார். அது ஏற்படுத்ததக்கூடிய பெரும் செலவைக் கருத்திற்கொண்டு நான் அதனைச் செய்ய விரும்பவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு வழங்கப்பட்ட ஏனைய வசதிகள், இவ்வீட்டிற்கும் அதன் பணியாளர்களுக்கும் உரியனவாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் வீட்டில் தொடர்ந்து குடியிருப்பதற்கு அனுமதிக்குமாறு நான் சபாநாயகர் கரு ஜயசூரியவையோ அல்லது கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையோ கோரவில்லை. அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை எதுவானாலும், அதனை அவர்கள் தமது சொந்த விருப்பத்திற்கமையவே செய்தனர்.

எனக்கு தொடர்ந்து கிடைத்த ஏனைய வசதிகளும் அத்தீர்மானத்திற்கு அமைவானவையேயாகும். 2018 ஒக்டோபர் அரசியலமைப்பு நெருக்கடியைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ஷ அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தமது பதவிகளைப் பரிமாறிக்கொண்டனர். இது அதே காலத்தில் இடம்பெற்றது.

அதே காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டமையும் இடம்பெற்றது. இதுவரை குறிப்பிடப்படாத ஒரேயொரு மற்ற வசதி CAT 1094 என்ற இலக்கம் கொண்ட வாகனமாகிய ஒரு பென்ஸ் மோட்டார் கார் ஆகும்.

இவ்வாகனம் 2017.01.30 ஆம் திகதி எனக்கு வழங்கப்பட்டது. இவ்வாகனத்தை நான் 2019.01.07 ஆம் திகதி புதிய எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பினேன். இவ்வாகனம் எனது பாவனையில் இருந்த இரண்டு வருட காலத்தில் அது 2082 கிலோ மீட்டர் தூரமே ஓடியுள்ளது.

எவ்வளவு சிக்கனமாக அவ்வாகனம் பயன்படுத்தப்பட்டது என்பதை இது காட்டுகிறது. நடந்தவைகளினால் நான் மிகவும் கவலைக்குள்ளாகியுள்ளேன். இந்த அவலட்சனமான நிலைமை தொடரக்கூடாது” என்றார்.