30 வருட யுத்தத்தில் இழந்தவற்றையும் கடந்த காலங்களில் அடைந்து கொள்ள முடியாதவற்றை பெற்றுக்கொள்வற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்தார்.
மேலும் யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக் கட்டியெழுப்பவும் கடந்த காலங்களில் வடக்கு மாகாண மக்களுக்கு கிடைக்காதவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு இதய சுத்தியுடனும் திறந்த மனத்துடனும் சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வடமாகாண ஆளுநராக இன்று (வியாழக்கிழமை) உத்தியோக பூர்வமாக கடமை ஏற்றுக் கொண்ட பின்னர் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “அமைச்சின் செயலாளர் பதவியை ஏற்று நான் அங்கு சென்றபோது மருத்துவர் சங்கம் ஒரு புறம் தாதியர் சங்கம் ஒரு புறம் என பல பிரச்சினைகளை முன்வைத்தார்கள். சுமார் ஒரு மாத காலத்திற்கு அவற்றில் 70 வீதமான பிரச்சினைகளை தீர்த்து வைத்துவிட்டுத்தான்.இங்கு வந்துள்ளேன்
அதில் ஒருரே ஒரு வேதனை தற்போது அமைச்சரவை அனுமதிக்கப்பட்டு அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடப்பிரிவு, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் வைத்தியசாலைகளுக்கான கட்டட வசதிகள் போன்றவற்றை முழுமைபெறச் செய்யமுடியாத நிலைக்கு விட்டுவிட்டு வந்துவிட்டேன்.
எனினும் அங்குள்ளவர்கள் நீங்கள் இங்கு இல்லாது விட்டாலும் நாங்கள் இதனை செய்து முடிப்போம் வடக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறினார்கள்.
ஜனாதிபதியின் செயலாளர் கூறிய முக்கிய விடயம் வடக்கு மாகாணம் மட்டுமன்றி எந்த மாகாணத்தில் ஆவது முதல் நிலையில் இருக்கும் வைத்தியசாலையின் தேவைகள் கல்வித் துறையின் குறைபாடுகள் உட்கட்டமைப்பு வசதிகள் வேலை வாய்ப்பு மற்றும் விவசாயத் தேவைகளை உடனடியாக செய்து கொடுப்பதற்கான பனிப்புரையை விடுத்துள்ளார்கள். குறித்த வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பதற்கு அந்தந்த அதிகாரிகளுடன் துணையாக இருப்பேன்.
அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் முரண்பட்ட கொள்கைகளுக்க அப்பால் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பால் ஒரு ஆளுநராக மட்டுமன்றி இந்த மாகாணத்தின் ஒருவராக இருந்து செயற்படுவேன்.
மேலும் உங்கள் அனைவருடனும் இணைந்து எத்தகைய விடையங்கள் செய்வது என்று ஜனாதிபதி செயலகத்துடனும் கலந்துரையாடி அதனை முடித்து வைப்பதற்கு இயலுமான வரை நடவடிக்கைகளை எடுப்பேன்.
உள்ளங்களில் இருக்கும் அளுத்தங்கள் இறுக்கங்கள் குறைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இதய சுத்தியுடனும் திறந்த மனத்துடனும் குறைகள் தவறுகளை நேரில் சுட்டிக்காட்டுபவர்களாக என்னுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நான் இங்கு வந்திருப்பது யாரையும் குறை செல்வதற்கு யாரையும் எனக்காக மாற்றிக்கொள்ள விமர்சிப்பதற்கும் அல்ல தள்ளி வைப்பதற்கும் அல்ல உங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு நம்பிக்கை இருக்கவேண்டும் மாகாணத்திற்கு சேவையாற்றத்தான் வந்திருக்கின்றேன்.
இந்த மாவட்டத்தை நேசிக்கின்றேன் எனது பெற்றோர் உறவினர் பெற்றோரின் பெற்றோர்கள் உறவினர்கள் இந்த மண்ணுக்காக போராடியிருக்கின்றார்கள். அவர்களின் தியாகங்களுக்கு தலைவணங்கி இந்த மாகாணத்திற்கு என்னால் முடிந்த சேவைகளைச் செய்வேன்.
இந்த உறவுப் பாலத்தைப் பயன்படுத்தி 30 வருட யுத்தத்தில் இழந்தவற்றையும் கடந்த காலங்களில் அடைந்து கொள்ள முடியாதவற்றை பெற்றுக்கொள்வற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்தக் கேட்டுக்கொள்கின்றேன் இதற்காகத்தான் ஜனாதிபதி ஒன்றரை மாத காலத்திற்கு பின்னர் இதனைச் செய்துள்ளார்” என்றார்.