தமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை நாம் என்ன செய்யப்போகின்றோம் #YouTube #Facebook - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, January 2, 2020

தமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை நாம் என்ன செய்யப்போகின்றோம் #YouTube #Facebook

முகநூல் என்ற சமூகவலைத்தளம் இன்று மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்று என்ற நிலைக்கு மாறியுள்ளது. மக்களிற்கு இடையிலான தொடர்பாடல் என்ற நோக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த வியாபாரப் பொருள் அதன் முதலாளிகளுக்கு அதிக பொருளாதார இலபத்தை கொடுத்துவரும் அதேசமயம், பல நாடுகளின் அரசியல் விவகாரங்களிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றது.தமிழினிப்படுகொலையாளிகளின் பங்காளிகளாக முகநூல் , யூரியூப் , கூகுள் பின்னணியில் இந்தியா ! # youtube #facebook

சில நாடுகளில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் அளவுக்கு செல்வாக்கு செலுத்தும் இந்த ஊடகம், தற்போது சில இனங்களின் இன விழுமியங்கள், இறைமை மற்றும் குறிப்பிட்ட இன மக்களின் அடிப்படைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவற்றிலும் அதிக தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த சமூக வலைத்தளம், தற்போது குறிப்பிட்ட இன மக்களின் விருப்பு வெறுப்புகளை தீர்மானிக்கும் சக்தியாக மாறி வருகின்றதும், தம்மை அறியாமலேயே மக்கள் இந்த வலைக்குள் வீழ்ந்து, அவர்களின் இன அடக்குமுறைக்குள் சிக்கி, தமக்கு தெரியாமலேயே அவர்களின் கொள்கையை பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும் மிகவும் வேதனையானது.

அதாவது கடந்த மாதம் 26 ஆம் நாள் உலகம் எங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தினை கொண்டாடியிருந்தனர்.இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக தமது முகநூலில் தலைவரின்; படங்களை பதிவிட்டிருந்தனர். ஆனால் அதனை தன்னிச்சையாக நீக்கிய முகநூல் சமூகவலைத்தளம், பலரின் கணக்கையும் சில மாதங்களுக்கு முடக்கியுள்ளது.

அதாவது யாரை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும், எந்த கொள்கையை நீங்கள் பதிவிட வேண்டும், எந்த கொள்கையை நீங்கள் பின்பற்ற வேண்டும், எந்த கருத்தை நீங்கள் எழுத வேண்டும், எந்த கருத்தை நீங்கள் பகிர வேண்டும் என்பதை எதிர்காலத்தில் முகநூல் என்ற வியாபார சமூகவலைத்தளமே தீர்மானிக்கும். அதாவது எதிர்வரும் காலங்களில் உங்கள் கொள்கைகளையும் கருத்துக்களையும் அவர்கள் தீர்மானிப்பார்கள்.

அவர்களின் கொள்கைகளுக்கு இணங்கி அவர்களின் சித்தாந்தங்களை ஏற்று, உங்களின் இன அடையாளங்களைத் தொலைத்து, உங்களின் இனபற்றை துறந்தால் நீங்கள் இந்த வியாபார சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து இருக்கலாம். இதுவும் ஒரு வகையான இன அடக்குமுறையே அதனை நாம் புரிந்துகொள்ள முடியாத வகையில் அவர்கள் வகுத்துள்ள சட்டங்கள் எம்மை கட்டிப்போட்டுள்ளது.

எனவே தான ஏறத்தாள 2.23 பில்லியன் மக்களை தனது அங்கத்தவர்களாகக் கொண்ட முகநூலின் பாதச்சுவடுகளே சீனாவில் இல்லை. ஆம் மேற்குலகம் சார்ந்த இந்த வியாபார வலைத்தளத்தின் அரசியல் மற்றும் பொருளாதார உள்நோக்கங்களைப் புரிந்து கொண்டுள்ள சீனா அதனை முற்றாகத் தடை செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தடை தற்போதும் உள்ளது.


சீனாவின் மேற்கு மாகாணத்தில் இடம்பெறும் கலவரங்களைத் தூண்டிவிடுவதில் முகநூல் அதிக நாட்டம் காண்பித்தததால் முகநூலுக்கான தடை சீனாவில் கொண்டுவரப்பட்டது. சீனாவின் ”Great Firewall’ என்ற சமூகவலைத்தளக் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் அமெரிக்காவின் நிறுவனங்களுக்கு மிகப்பெரும் சவலாக மாறியுள்ளது. ஆனால் சீனா தனது சொந்த சமூகவலைத்தளங்களை அங்கு கொண்டுள்ளது.


எனினும் சீனா என்ற பெரும் சந்தைவாய்ப்பை கைவிட விரும்பாத முகநூல் நிறுவனம் வேறு பெயர்களில் தன்னை பதிவுசெய்து அங்கு ஊடுருவ பல தடவைகள் முயன்றுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட பல பெயர்களை மோப்பம் பிடித்துவரும் சீனா அவற்றை தடைசெய்து வருகின்றபோதும், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் மேற்கொண்ட இவ்வாறான முயற்சிகளால் முகநூலின் வருமானம் 5 பில்லியன் டொலர்களை எட்டியிருந்தது பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.எனவே தான் முகநூலின் நிறுவுனராக மார்க் செகெர்பேர்க்; சீனாவுக்கான பயணங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு பேச்சுக்களை நடத்திவருகின்றார்.

முகநூலுக்கான தடை சீனாவில் மட்டும் கொண்டுவரப்படவில்லை, தாய்வானிலும் உண்டு. மேலும் பங்களாதேசம், ஈரான் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளிலும் அதன் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஸ்யாவினதும், அங்கு வாழும் மக்களினதும் தனிப்பட்ட தரவுகளை முகநூல் மற்றும் ருவிட்டர் சமூகவலைத்தளங்கள் சேமித்து வைத்திருப்பதற்கு தமது அனுமதிகளைப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டுக்களை ரஸ்யா இந்த வருடத்தின் ஆரம்பத்தில் முன்வைத்திருந்தது.

ஆனால் தற்போது ரஸ்யாவில் தயாரிக்கப்படும் கணணி மென்பொருட்களை உள்வாங்கி செயற்பட மறுக்கும் தொழில்நுட்ப சாதனங்களை முற்றாக தடைசெய்வதற்கு ரஸ்யா திட்டமிட்டுள்ளது. இந்த தடைச்சட்டமானது 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்குவரவுள்ளது.

ரஸ்யாவின் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் முயற்சி இது என ரஸ்யா தெரிவித்தாலும், மேற்குலகத்தின் உளவுபார்க்கும் முயற்சியை முறியடிக்கும் நடவடிக்கையாகவே அவதானிகள் இதனைப் பார்க்கின்றனர்.

தற்போது தமிழ் இனத்தின் எழுச்சிகளை மறைமுகமாக முடக்க முற்பட்டுநிற்கும் முகநூல் சமூகவலைத்தளம் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சிறீலங்காவில் இடம்பெற்ற தேர்தல்களிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் ஒரு சைபர் தேர்தல் என கொழும்பைத் தளமாகக் கொண்ட தொழில்நுட்ப தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் “முஸ்லீம் கடையர்களால் அழிக்கப்பட்ட புத்தர் சிலை” என்ற செய்தி உடைந்த புத்தர் சிலையின் படத்துடன் சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டு முகநூலில் பகிரப்பட்டதால் பெருமளாக கடும்போக்கு சிங்களவர்களின் வாக்குக்கள் கோத்தபாயா ராஜபக்சாவின் பக்கம் திரும்பியிருந்தது.
2014 ஆம் ஆண்டு 25 இலட்சம் முகநூல் கணக்குகளையும், 50,000 ருவிட்டர் கணக்குகளையும் கொண்டிருந்த சிறீலங்கா தற்போது 60 இலட்சம் முகநூல் கணக்குகளை கொண்டிருக்குமளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த தொகையானது சிறீலங்காவில் உள்ள மொத்த சனத்தொகையின் ஏறத்தாள 28 விகிதமாகும்.

சிறீலங்கா உள்ளிட்ட பல நாடுகளின் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ள இந்த சமூகவலைத்தளம் தற்போது தமிழினத்தின் மீது தன் பார்வையை திருப்பியுள்ளது. முகநுலின் இந்த நடவக்கையானது சிறிலங்கா அரசு மீது தமிழ் மக்கள் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையாகும், அதாவது மேற்குலகமோ அல்லது இந்தியாவோ சிறீலங்காஅரசு மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தலாமே தவிர தமிழ் அல்ல என்பதை உணர்த்துவதாக அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதாவது பேரம்பேசும் சக்தியை தமிழ் மக்கள் அடைவதை இந்த சக்திகள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதாவது கடந்த ஜனவரி மாதம் தனது ஆசிய-பசுபிக் பிராந்திய கட்டமைப்பில் மாற்றம் ஒன்றை கொண்டுவந்த முகநூல் நிறுவனம் ஆறுபேர் அடங்கிய இந்தியக் குழு ஒன்றையும் அமைத்திருந்தது. இந்த ஆறு நபர்களில் சிலர் இந்தியாவின் முன்னாள் அரசியல்வாதிகள் என்பதுடன், தமிழ் இனத்திற்கு எதிராக சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

எனவே முகநூலின் தற்போதைய நடவடிக்கை என்பது எம் இனத்தின் மீது திணிக்கப்படும் புதிய ஒரு அடக்குமுறையாகவே நாம் அணுகவேண்டும். அதனை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அதற்கு சிறந்த மாற்றுவழியாக எமக்கான தேசிய ஊடகம் ஒன்று வலுவாக கட்டியமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் நாம் ஒரு ஊடகச்சமரை ஆரம்பித்து, உலகம் எங்கும் சிதறிக்கிடக்கும் தமிழினத்தை ஒருங்கிணைத்து போராடவேண்டும்.

அது மட்டுமல்லாது இந்த அடக்குமுறைக்கு எதிராக எமது எதிர்ப்பை நாம் தெரிவிக்கவேண்டும். உதாரணமாக உலகில் தமிழர் வாழும் நாடுகளில் உள்ள முகநூலின் காரியாலங்களுக்கு முன்பு அல்லது அந்த நாடுகளின் நகரங்களில் ஒன்றுதிரண்டு நாம்; ஜனநாயக வழியிலான எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும், உலகம் எங்கும் உள்ள தமிழ் அமைப்புக்கள் எல்லாம் தமது கண்டனங்களைத் தெரிவித்து மின்னஞ்சல்களை முகநூலுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறான போராட்டங்கள் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.இல்லையெனில் இந்த வியாபார உலகில் தமது சுயநல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டு வலம்வரும் சமூகவலைத்தளங்களின் கொள்கைகளுக்குள் கட்டுண்டவர்களாக நாம் எமது இனத்தின் அடையாளங்களைத் தொலைத்து பரிதவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.

– வேல்ஸ்சில் இருந்து அருஷ்