சிறிலங்கா கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியகல பகுதியில் இன்று (14) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும், கண்டியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற பஸ்ஸும் கினிகத்தேனை தியகல பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் பயணித்த 23 பேர், காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 22 பேர் வட்டவளை வைத்தியசாலையிலும், ஒருவர் கினிகத்தேனை வைத்தியசாலையிலும், அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, மேலும் 6 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்கு பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ் முறையற்ற ரீதியில் பயணித்ததாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்