பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்ட பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50ற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (6) மாலை 05 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பசறை பகுதியிலிருந்து எக்கிராவ பகுதிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த அரச பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் பஸ் சாரதி உட்பட 50ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 20ற்கும் மேற்பட்டோர் பதுளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.