வடக்கு, கிழக்கிற்கு அளவிற்கதிக நிதி; ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு ரணிலே காரணம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 7, 2020

வடக்கு, கிழக்கிற்கு அளவிற்கதிக நிதி; ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு ரணிலே காரணம்!

ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க அடைந்த தோல்விக்கான 99 வீதமான பொறுப்பை ரணில் விக்கிரமசிங்கவே ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார் சரத் பொன்சேகா.

நேற்று கிரிபத்கொடவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது அரசாங்கம் பல தவறுகளை செய்தது. நல்லாட்சி என கூறிக்கொண்டு மக்களை மறந்து செயற்பட்டது. அதில் 99 வீதமான பொறுப்பு ஐ.தே.கவின் தலைவருக்கே உள்ளது. அதாவது முன்னாள் பிரதமர்.

தொழில் வாய்ப்புக்களை வழங்கவில்லை. சில அமைச்சர்கள் 7 அல்லது 8 பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்கினர். ஒரு அமைச்சர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது அமைச்சிலிருந்து 1,500 பேரை வெளியேற்றியுள்ளார். அந்த 1,500 பேரும் அமைச்சரின் தொகுதியை சேர்ந்தவர்கள். எமது தொகுதிகளிற்கு அவ்வாறு கிடைக்கவில்லை. பிரதமர் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். நிதி முகாமைத்துவத்தை சரியாக மேற்கொள்ளவில்லை.

கொழும்பு மாவட்டத்திலும் நாம் தோல்வியடைந்தோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கு 63 பில்லியனை ஒதுக்கியிருந்தார். அந்தப்பணத்தை ஒரு வருடத்தில் செலவிட முடியாதென்பது பிரதமருக்கு புரிய வேண்டும்.

அரசியலில் முதிர்ச்சியிருந்தாலும், அதை புரிந்து கொள்ளும் இயலுமை அவருக்கு இல்லையென்பது புரிகிறது.

இறுதியில் எமது ஜனாதிபதி வேட்பாளரே சிக்கினார். நாம் வெற்றிப்பாதைக்கு திரும்புவதென்றால், கட்சி தலைமையில் முகங்களை மாற்ற வேண்டும் என்றார்