தாம் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை வழங்கிய சுவிஸ் தூதரக பெண் பணியாளரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் புலனாய்வு துறைக்கு அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் இன்று காலை மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.
குறித்த பணியாளரிடம் ஏற்கனவே ஐந்து தடவைகள் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள போது, சாட்சியம் பெறும் நடவடிக்கைகள் இன்னமும் முடியவில்லை என குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் மீண்டும் குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார் .
அவரிடம் சாட்சியம் பெறப்பட்ட பின்னர் அவர் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவர் அங்கொடை மனநல மருத்துவமனையில் நிபுணத்துவ ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் தாம் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை வழங்கியதற்காக அவரை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்ட மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சுவிஸ் தூதரக பெண் ஊழியர் சற்றுமுன் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.