புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கரிக்கட்டை பகுதியில் இன்று திங்கட்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் ஏற்றிச் செல்லும் பவுஸர் ஒன்றுடன், கார் ஒன்று மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மாலபே, தலவத்கொட பகுதியைச் சேர்ந்த நிசாந்த மன்சுல சில்வா (வயது 43) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொழும்பில் இருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸரும், அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுக் கார் ஒன்றும் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது குறித்த காரில் ஐவர் பயணித்துள்ளதுடன், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஏனைய நால்வரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ௯றினர்.
குறித்த காரை செலுத்தி சென்ற சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே விபத்துக்கு காரணம் என மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் பவுஸர் வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.