மழையுடன் கூடிய காலநிலை – பல நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, December 7, 2019

மழையுடன் கூடிய காலநிலை – பல நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல நீர்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலா வாவியின் இரு வான் கதவுகளும், ராஜாங்கனை நீர் தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் சென்று புகைப்படங்கள் எடுப்பதனை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 21 மாவட்டங்களில் 70 ஆயிரத்து 957 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 35 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள 21 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய இயற்கை காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் 5.6 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் கீழ் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு அடிப்படை நிவாரண நிதியாக 3.7 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.