பறவைகள் போன்று மிமிக்ரி சத்தமிட்டு சூட்சுமமான முறையில் திருடி வந்த குருவி என்று செல்லமாக அழைக்கப்படும் பிரபல திருடன் சிக்கினான்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 6, 2019

பறவைகள் போன்று மிமிக்ரி சத்தமிட்டு சூட்சுமமான முறையில் திருடி வந்த குருவி என்று செல்லமாக அழைக்கப்படும் பிரபல திருடன் சிக்கினான்!


மிருகங்கள், பறவைகள் போன்று மிமிக்ரி சத்தமிட்டு சூட்சுமமான முறையில் திருடி வந்த குருவி என்று செல்லமாக அழைக்கப்படும் பிரபல திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி நகை திருட்டு தொடர்பான முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றது.
இதனடிப்படையில் முறைப்பாடு சம்பந்தமாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் வை அருணன் சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப் (63188) கான்ஸ்டபிள் கீர்த்தனன்(6873) ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் திருட்டு சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகாமையில் உள்ள சிசிடிவி காணொளியை பெற்று குறித்த காணொளியை ஆதாரமாக கொண்டு சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரால் களவாடப்பட்ட நகைகள் இவரது சகாவான மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பகுதியை சேர்ந்த நபரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் , அந்த நகைகளை குறித்த நபர் பொத்துவில், பட்டிருப்பு, பாண்டிருப்பு பகுதியில் உள்ள நகை கடைகளில் அடகு வைத்திருந்த நிலையில் அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலுக்கு அமைய 6 பவுண் பெறுமதியான நகைகளை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குருவி என்ற பிரபல திருடன் ஏற்கனவே 3 மோட்டார் சைக்கிள் திருட்டிற்காக 3 முறை தலா 6 மாத சிறை தண்டனை பெற்றிருந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்