ரூ.50¾ லட்சம் கையாடல் செய்த அரசு அதிகாரிகள் உள்பட 4 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்த இலங்கை அகதிகள் வீடுகள் கட்டுவது, தொழில் தொடங்குவது என அவர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 1994-95, 1995-96-ம் ஆண்டுகளில் அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதியை அரசு அதிகாரிகள், போலி ஆவணங்கள் தயாரித்து, கையாடல் செய்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.
அதன் பேரில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விருத்தாசலம் கோட்டாட்சியராக இருந்த பாட்ஷா, திட்டக்குடி தாசில்தாராக இருந்த வீரசெல்லையா, திட்டக்குடி கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார்கள் பிச்சைப்பிள்ளை, கோவில்பிள்ளை மற்றும் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சதாசிவம் உள்பட 15 பேர் போலி ஆவணங்கள் தயாரித்து 50 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரூபாய் கையாடல் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2003-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து பாட்ஷா உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போதே பாட்ஷா உள்பட 2 பேர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டனர். இந்நிலையில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து
நேற்று இவ்வழக்கில் நீதிபதி திருவேங்கடசீனுவாசன் தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வீரசெல்லையா (72), சதாசிவம்(71) ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.12 ஆயிரம் அபராதமும், பிச்சைப்பிள்ளை(72), கோவில்பிள்ளை(72) ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் 9 பேரை விடுதலை செய்து நீதிபதி திருவேங்கடசீனுவாசன் தீர்ப்பு வழங்கினார்.