தமிழ் தேசிய கட்சிகளின் பிளவிற்கும், ஒற்றுமைக்கும் இரா.சம்பந்தன் குழுவே தடையாக இருக்கிறது என்பதை புட்டுப்புட்டு வைத்துள்ளது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.
அத்துடன், தமிழ் மக்கள் தங்களுக்கே மீண்டும் ஆணை வழங்க வேண்டும், புலிகள் அழிக்கப்பட்டது நல்லது என்று தமிழ் அரசுக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவில் சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களிற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ்.க.பிறேமச்சந்திரன் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில்,
கடந்த 18ஆம் திகதி நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழரசுக் கட்சியின் பல தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் திரு.சம்பந்தன் பல்வேறுபட்ட விடயங்களை உள்ளடக்கி நீண்ட உரை ஒன்றை ஆற்றியிருந்தார்.
தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு எழுபது வருடங்கள் ஆகியிருக்கலாம். 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 2004ஆம் ஆண்டுவரை கடந்த 28ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி உறங்குநிலையிலேயே இருந்தது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழரசுக் கட்சியின் சின்னம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இது ஒருபுறமிருக்க, திரு. சம்பந்தன் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக தாங்கள் பல விடயங்களைகச் சாதித்திருப்பதாகவும் சர்வதேச ரீதியான ஒப்புதல்களை எழுத்துமூலம் தாங்கள் பெற்றிருப்பதாகவும் தாங்கள் நீண்ட அனுபவசாலிகள் என்றும் மக்கள் தொடர்ச்சியாக தங்களுக்கே ஆதரவு தந்திருக்கிறார்கள் என்றும் தொடர்ந்தும் தங்களுக்கே ஆதரவு தரவேண்டும் என்று கூறியிருப்பதுடன், தங்களால் மாத்திரமே அதிகாரப்பகிர்வினை ஏற்படுத்திக்கொள்ள முடியுமென்றும் ஏனையோரால் இவ்விடயங்களைக் கையாள முடியாதென்றும் கூறியிருப்பதுடன், தங்களால் மாத்திரமே சர்வதேச சமூகத்தினதும் இந்தியாவினதும் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற தோரணையிலும் பேசியிருக்கின்றார்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தினூடாகவும் சர்வதேச மட்டத்திலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தது. அது வெறுமனே சம்பந்தர் தொடர்புபட்ட விடயமாக இருக்கவில்லை. அந்தக் காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவை இணைந்தே சர்வதேச ரீதியாகவும் பாராளுமன்றத்திலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை ஜனநாயக வழியில் முன்னெடுத்து வந்திருந்தனர். தனித் தமிழரசுக் கட்சியோ அல்லது திரு.சம்பந்தனோ இதற்குத் தனித்து உரிமைகோர முடியாது.
2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னர், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்காகப் போராடுவதற்கான முழுப்பொறுப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேல் வந்திறங்கியது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய நிலையில் தமிழரசுக்கட்சி, ரெலோ, ஈபிஆர்எல்எவ் ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெற்றிருந்தன. இந்தக் காலகட்டத்தில்தான், மகிந்த அரசாங்கத்துடன் பதினெட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அவை தோல்வியில் முடிவடைந்தது. இதே காலகட்டத்தில் திரு.சுமந்திரன் அவர்கள் மகிந்தவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியதும் திரு.சம்பந்தன் சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றதும், ரணிலை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து மேதினம் நடத்தி அதில் சிங்கக் கொடியை கையில் ஏந்திய நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த விடயங்கள் அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பங்காளிக் கட்சிகளினதும் எதிர்ப்பிற்கு மத்தியில் திரு.சம்பந்தனால் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான முடிவுகளாகவே இருந்தன. இவ்வாறான சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்காக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை (புளொட்)யும் கூட்டமைப்பின் அங்கத்தவராக இணைத்துக்கொண்டோம்.
அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கமாக அதற்கான யாப்பு ஒன்றினைத் தயாரிக்கவும் அதனைப் பதிவு செய்வதற்குமாக பல்வேறுபட்ட கலந்துரையாடல்களை கூட்டமைப்பிற்குள் தொடர்ச்சியாக நடத்திவந்தோம். தமிழரசுக் கட்சியின் தலைமை சாக்குப்போக்குச் சொல்லி அதனை முற்றிலும் நிராகரித்தது. இன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதுவிதக் கட்டமைப்புமற்ற, யாப்பு எதுவும் இல்லாத தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்படாத, ஒரு கூட்டாகவே இருந்து வருகின்றது.
2015ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலின் பின்னர், இவர்கள் எடுத்த அனைத்து முடிவுகளும் தமிழ் மக்களை மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் முடிவுகளாகவே அமைந்திருந்தது. பிரத்தியேகமாக ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசாங்கத்திற்குப் பெற்றுக் கொடுத்த கால அவகாசங்களானது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விடாமல், ஒரு தடுப்பணையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கம் பாதுகாக்கப்பட்டதே தவிர, தமிழ் மக்களுக்கான நீதியை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டமுடியவில்லை. அதைப் போலவே, உள்நாட்டிலும், அரசினைப் பாதுகாப்பதை முழுமுதல் நோக்கமாகக் கொண்டு தமிழ் மக்களுக்குக் கேடுவிளைவிக்கக்கூடிய அனைத்து வரவு-செலவுத் திட்டங்களுக்கும் இவர்களால் ஆதரவு வழங்கப்பட்டது. அதற்குச் சொல்லப்பட்ட காரணம்: ஒரு புதிய அரசியல் சாசனம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் அதற்கு இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகவே அமைந்திருந்தது.
நீதிமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் சர்வதேச அமைப்புக்களிலும் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்துவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இவர்கள் கூறிவந்த புதிய அரசியல் சாசனம் என்பதை இறுதிவரை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு கூட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஒருவகையில் காரணமாக இருந்தாலும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தை இவர்கள் சரியான முறையில் கையாளத் தவறியமையும் புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டுவரமுடியாமைக்கான காரணம் ஆகும்.
பௌத்தத்திற்கு முதலிடம் என்பதை ஏற்றுக்கொண்டும், வடக்கு-கிழக்கு இணைப்பை விட்டுக்கொடுத்தும், சமஷ்டியைக் கைவிட்டும்கூட இவர்களால் ஒரு அரசியல் சாசனத்தைக் கொண்டுவரமுடியவில்லை. புதிய அரசியல் சாசனம் மட்டுமன்றி, குறைந்தபட்சம் அரசியல் கைதிகளின் விடுதலையையோ, காணிகளை முழுமையாக விடுவிப்பதிலோ அல்லது ஏனைய நெருக்குவாரங்களிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவதிலோகூட இவர்களால் எதனையும் சாதிக்க முடியவில்லை.
நீராவியடி பிள்ளையார் கோவில், வெடுக்குநாரி சிவன், கன்னியா வெந்நீரூற்று போன்ற புராதன ஆலயங்களைப் பாதுகாப்பதற்குக்கூட மக்கள் வீதியில் போராட வேண்டியிருக்கிறதே தவிர, இவர்களது இணக்க அரசியல் மூலம் எதனையும் சாதிக்க முடியவில்லை. இவ்வாறான சூழ்நிலையில்தான் திரு.சம்பந்தன் அவர்கள் தமக்கு மாத்திரம் மீண்டும் ஒருமுறை மக்கள் ஆணை வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்.
‘2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து பாராளுமன்ற தேர்தல், மாகாணசபைத் தேர்தல், உள்ளுராட்சிமன்றத் தேர்தல் என்பவற்றில் எமது மக்கள் எங்களை ஆதரித்துவந்தார்கள். இவை தொடரவேண்டும். நாங்கள் கையாளவேண்டிய கடமைகள், நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டிய கடமைகள் எதிர்காலத்தில் சர்வதேசரீதியாகவே உள்நாட்டிலும் நாங்கள் நிறைவேற்றிய கடமைகள் உள்ளன. இவற்றை நாங்கள் நிறைவேற்றுவதாக இருந்தால் உங்கள் ஆணையை நாங்கள் முழுமையாகப் பெறவேண்டும். அந்த ஆணையின் ஒருபகுதி யாருக்கும் போய்விடக்கூடாது. இது முக்கியமாகும். அத்தியாவசியமாகும். எனவே அனைவரும் எழுபது ஆண்டுகாலமாக ஒரு நீண்ட பயணத்தில் ஈடுட்டிருக்கின்றோம். நாங்கள் எங்கு போகின்றோம் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த இலக்கை அடைவதற்கு எதைச் செய்ய வேண்டும் என்று வாக்குறுதிகள் பெற்றுப் பகிர்ந்துள்ளோம். அது நிறைவேற்றப்படவேண்டும்.’ என்று திரு.சம்பந்தன் உரையாற்றியிருக்கிறார்.
திரு.சம்பந்தனின் நீண்ட உரையில் மேற்கண்ட விடயம் ஒரு சிறுபகுதி மாத்திரமே. தாங்கள் சர்வதேச சமூகத்திடமிருந்து எழுத்துமூலமான உத்தரவாதங்களைப் பெற்றிருப்பதாகக் கூறுகின்றார்கள். அவ்வாறாயின், அந்த எழுத்துமூலமான உத்தரவாதங்கள் என்ன என்பதை இவர் வெளிப்படுத்தத் தயாரா?
ஏற்கனவே மக்கள் தங்களுக்குத் தொடர்ச்சியாக ஆணையை வழங்கி வந்துள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். இவர் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு விசுவாசமாக நடந்துகொண்டாரா? தமிழ் மக்களுக்கு உரித்தான உரிமைகள் எதனையாவது பெற்றுக்கொடுத்தாரா? கடந்த நான்கரை வருடங்களாக அவர் எடுத்த முடிவுகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததற்கான காரணத்தைப் பரிசீலித்தாரா? அதிலிருந்து பாடங்கள் எதனையும் கற்றுக்கொண்டாரா?
இப்பொழுது மீண்டும் ஒருமுறை முழுமையான ஆணை வேண்டுமெனக் கேட்கிறார். ஒருபகுதிகூட யாருக்கும் போய்விடக்கூடாது என்றும் கூறுகிறார். இத்தகைய புதிய ஆணையினூடாக எதனையாவது சாதிப்பதற்கான திட்டங்களோ, வழிகாட்டல்களோ, அதற்கான வியூகங்களோ உங்களிடம் இருக்கின்றதா?
‘விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்ல விடயமாக இருக்கலாம்’ என்ற ஒரு கருத்தையும் திரு.சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லதென்று திரு.சம்பந்தன் கருதுவாரானால் விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்னரான கடந்த பத்து வருடத்தில் அவர் எதனைச் சாதித்தார்? விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லது என்று கூறுவதானது ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டது நல்லதொரு விடயமாக இருக்கலாம் என்றே பொருள்படும். ஆயுதப் போராட்டம் என்பது சிங்கள-பௌத்த மேலாதிக்க சக்திகளிடமிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான போராட்டமே தவிர, அது ஒரு பயங்கரவாத நடவடிக்கையல்ல. வெளிநாட்டு நீதிமன்ற வழக்குகளில்கூட விடுதலைப் புலிகள் உரிமைகளுக்காகப் போராடுகின்ற அமைப்பே தவிர பயங்கரவாத அமைப்பல்ல என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆகவே இதில் எது சரி என்பதை திரு.சம்பந்தன் அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, ஏனைய விடுதலை அமைப்புகளும்கூட, தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக தமது இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். பல்வேறு தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களின்மீது நின்றுதான் நாம் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து குரல்கொடுக்கின்றோம் என்பதை திரு.சம்பந்தன் மறந்துவிடக்கூடாது.
நீங்கள் சொல்வது அத்தனையும் சரியென்று நினைக்காதீர்கள். உங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து நீங்கள் கருத்துக்களை வெளியிடுவது நல்லதென்பதுடன், மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றமுடியும் எனக் கருத வேண்டாம் என்றும் தங்களை வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.
உங்களது உதடுகள் ஐக்கியத்தை உச்சரிக்கின்றபோதிலும் உங்களது தன்னிச்சையான செயற்பாடுகள் எப்பொழுதும் ஐக்கியத்திற்குக் குந்தகமாகவும் எதிராகவுமே இருக்கின்றது. உங்களது செயற்பாடுகளும் அணுகுமுறைகளுமே ஒரு மாற்றுத் தலைமைக்கான அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. தமிழ் அரசியல் தலைமைகள் அடுத்தகட்ட அரசியலை முன்னெடுத்துச் செயற்பட வேண்டிய நிலையில், மீண்டும் ஒரு புதிய ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதில் நேரத்தைச் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தங்களாலேயே உருவானது என்பதைத் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விழைகிறோம். இதற்கான முழுப்பொறுப்பையும் தாங்களே ஏற்கவேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.