என்னுடைய தேசியம் நல்ல கொலஸ்ரோல்; ஏனையவர்களுடையது கெட்ட கொலஸ்ரோல்: டக்ளஸ் தேவானந்தா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 20, 2019

என்னுடைய தேசியம் நல்ல கொலஸ்ரோல்; ஏனையவர்களுடையது கெட்ட கொலஸ்ரோல்: டக்ளஸ் தேவானந்தா!

என்னுடைய தேசியம் என்பது நல்ல கொலஸ்றோல். மற்றவர்களின் தேசியம் கெட்ட கொலஸ்ரோல். என்னுடைய தேசியம், உடம்பை பாதுகாத்து, நீண்டகாலத்திற்கு வைத்திருக்கும். இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகர்வது. மற்றையவர்களின் தேசியம் கருப்பு கொலஸ்ரோல். மக்களை விரைவாக அழித்து விடும். இதுதான் வரலாறு எங்களிற்கு நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ளார் கடற்தொழில், நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

யாழில் இன்று (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டுமென சுமந்திரன் தெரிவித்தது அரசியல் நோக்கமுடையது என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சின் ஊடாக பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். வடக்கில் கடல் உயிரினங்கள் வளர்ப்பின் ஊடாக கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டக் கூடிய திட்டத்தை முன்வைத்துள்ளோம். கடற்றொழில் செய்பவர்கள்தான் இந்த திட்டத்தை செயற்படுத்த முடியுமென்றில்லை. யாரும் செய்யலாம்.

இறால், நண்டு, அட்டை, கடல் தாவரம் வளர்ப்பு தொடர்பான திட்டத்தை தீட்டி செயற்படுகிறோம். ஒருநாள் அமைச்சராக இருந்தபோதே பல விடயங்களை செய்தோம். இந்த அமைச்சில் 3,4 மாதங்கள்தான் இருப்பேன். ஏனெனில் தேர்தல் வரவுள்ளது. தேர்தலின் பின்னரும் இந்த ஆட்சிதான் அமையும். அப்போதும், இதே அமைச்சில்தான் நீடிப்பேன்.

தற்போது ஆட்சியாளர்களிடம் பணமில்லை. தேர்தலின் பின்னர்தான் பணம் ஒதுக்கப்படும். உடனடியாக மக்களை வளப்படுத்த என்ன செய்ய முடியுமோ, அதை செய்வேன். இந்திய, நோர்வே முதலீட்டாளர்கள் எம்முடன் தொடர்பு கொண்டுள்ளனர். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உருவாக்குவோம்.

நேற்று கொழும்பிலிருந்து வரும்போது, பல இடங்களில் மக்களை சந்தித்தேன். அமைச்சிற்கு அப்பாலான பிரச்சனைகளை மக்கள் தெரிவித்தார்கள். கடந்த ஆட்சியில் வீட்டுத்திட்டம், காணி, வாழ்வாதாரம் விடயங்களில் ஏமாற்றப்பட்ட மக்கள்முறைப்பாடுகளை வைத்தார்கள். அவற்றை தீர்ப்பதாக வாக்குறுதியளித்துள்ளேன்.

செல்வநாயகம் என்று ஒரு ஐயா இருந்தார். அவர் தன்னுடைய இயலாமையில், கடவுள்தான் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றுவிட்டு போய் விட்டார். பின்னர், இடையில் சிலர் தாங்கள்தான் கடவுள் என்றார்கள். அவர்களும் இன்று இல்லை. அதனாலும் பிரச்சனைகள் இழுபறியாக போய் விட்டது. தமிழ் மக்கள் தொடர்ந்து தவறாக வழிநடத்தப்படுவார்களாக இருந்தால், கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

வரவுள்ள சந்தர்ப்பங்களை தமிழ்மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். கடந்த தேர்தலில், என்னை நம்புங்கள், உங்களின் பிரச்சனையை வெகுவிரைவாக தீர்த்து தரவேன் என்று சொன்னேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் கடந்த காலத்தில் தேர்தல்களின்போது பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகளை அபகரித்தனர். ஐக்கியம், சர்வதேசம், தென்னிலங்கைக்கு காட்ட வேண்டுமென சொல்லி வந்தனர். அது முழுக்க பொய் தனம். மக்களை ஏமாற்றுவது, வாக்குகளை அபகரிப்பது, இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பதுதான் அவர்களின் நோக்கம். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது நோக்கமல்ல.

தீபாவளிக்கு வரும், சித்திரை வருடப்பிறப்பிற்கு வரும், பொங்கலிற்கு வருமென்று எத்தனையோ தடவை தமிழர்களின் அரசியல் வரலாற்றில் சொல்லப்பட்டு வந்தது. ஏக பிரதிநிதித்துவத்தை தாருங்கள், நாங்கள் வென்று தருவோம் என சொல்லப்பட்டது. தேசியம் என்பது அடுத்தது. என்னுடைய தேசியம் என்பது நல்ல கொலஸ்றோல். மற்றவர்களின் தேசியம் கெட்ட கொலஸ்ரோல். என்னுடைய தேசியம், உடம்பை பாதுகாத்து, நீண்டகாலத்திற்கு வைத்திருக்கும். இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகர்வது. மற்றையவர்களின் தேசியம் கருப்பு கொலஸ்ரோல். மக்களை விரைவாக அழித்து விடும். இதுதான் வரலாறு எங்களிற்கு நிரூபித்துள்ளது.

வரும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்துங்கள், நாங்கள் சொல்வதை செய்ய வாக்குப்பலத்தை தாருங்கள். ஏனையவர்களை போல, ஆட்சியாளர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என சொல்ல மாட்டோம்.

உள்ளூராட்சிசபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சில சபைகளில் நாங்கள் ஆதரித்திருந்தோம். கிடைக்கிற சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டுமென்பதுதான் எமது நிலைப்பாடு. எதிர்த்துக் கொண்டிருந்தால் யாரும் ஆட்சியமைக்க முடியாது. அவர்கள் மக்களிற்கு பயனுள்ள திட்டங்களை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன், ஆதரித்தோம். ஆனால் அவர்கள் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், தற்போது எதிர்க்க முடிவெடுத்துள்ளோம். ஆதரித்ததும் மக்கள் நலன் சார்ந்தது, எதிர்ப்பதும் மக்கள் நலன் சார்ந்தே.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் யாழ் மாநகரசபையை சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை. மாகாணசபையை போலவே, உள்ளூராட்சிசபைகளை நிர்வகிக்க முடியவில்லை. அசுத்தமாக வைத்துள்ளனர். இதனால் டெங்குப் பெருக்கம் ஏற்பட்டது. டெங்குப் பெருக்கத்திற்கும் கோட்டாதான காரணம், வடக்கிற்கு டெங்கு நுளமபை அனுப்பி விட்டாரென தமிழ்ப் பத்திரிகைகள் எழுதுகின்றனவோ தெரியாது. டெங்கு எனது அமைச்சு தொடர்புபட்டதல்ல, அது சுகாதார அமைச்சினுடையது.

(உதயன் பத்திரிகையை காண்பித்து) அடிக்கடி பிழையான செய்திகளை வெளியிட்டு வரும் பத்திரிகை. தமிழர் ஆட்சி மலர்ந்தது என தலையங்கம் போட்டவர்கள், இப்பொழுது கருகி விட்டதென எழுதுகிறார்கள். அந்த ஆட்சியில் நிறைய செய்திருக்கலாம்.

ஈ.பி.டி.பியின் மீதான பயம் காரணமாக, தேர்தலில் தோல்வியடைந்து, உதிரிகளாக இருந்த கட்சிகளின் கூட்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு. இப்பொழுது கூறும் ஐக்கியம் என்பது மக்கள் நலன்சார்ந்ததல்ல. அது மக்களை ஏமாற்றி, வாக்குகளை அபகரிப்பது. ஒருமுறை ஏகபிரதிநிதித்துவம் என்றார்கள். இருப்பதையும் இல்லாமலாக்கி, வேரடி மண்ணோடு போய் விட்டது.

ஸ்ராண்ட் இல்லாத சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று சாய்த்து வைத்தால்தான் நிற்கும். இல்லாவிட்டால் விழுந்து விடும். இவர்கள் தனித்தனியாக தேர்தலில் நின்று போட்டியிட்டு, வெற்றியீட்டிய பின்னர் ஐக்கியம் பற்றி கதைத்தாலே அது மக்கள் நலன் சார்ந்தது.

என்னை பதவி விலக வேண்டுமென சுமந்திரன் விடுத்த கோரிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. அந்த கோரிக்கையில் நியாயம் உள்ளதா என்பதற்கு அப்பால் அது அரசியல் நோக்கமுடையது.

இன்றுள்ள ஆட்சியாளர்களை நான் கொண்டு வரவில்லை. நான் அதில் பங்கெடுத்துள்ளேனே தவிர, இந்த ஆட்சியை நான் கொண்டு வரவில்லை. பெரும்பான்மையான மக்கள்தான் இந்த ஆட்சியை கொண்டு வந்துள்ளனர். என்னுடைய தேசிய நல்லிணக்கம் காரணமாக அதில் எனக்கு இடம் கிடைத்தது. எனக்கு இந்த ஆட்சியில் பங்கெடுக்கும் விருப்பமிருக்கவில்லை. காரணம், நான் தேர்தலில் வெற்றியடைய வில்லை. ஆனால் அமைச்சு பதவியேற்குமாறு பலர் வற்புறுத்தினார்கள். கொழும்பிலுள்ள பெரும்பாலான தமிழ் ஊடகவியலாளர்கள், மதப் பெரியவர்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள், எமது கட்சியினரின் அழுத்தம் காரணமாக நான் பதவியேற்றேன்.

என்னை பதவிவிலக கோரும் தகுதி சுமந்திரனிற்கு இருக்கிறதா இல்லையா என்பதற்கு அப்பால், அவர் உள்நோக்கமுடன் அதை சொன்னார்.

எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் சட்டவிரோத மண்அகழ்வு, போதைவஸ்து பயன்பாடு, கடத்தல், வாள்வெட்டு விடயங்களை கட்டுப்படுத்தும் உயர்மட்ட மாநாடொன்றை நடத்தவுள்ளேன். இன்று காலையில் பொலிஸ்மா அதிபருடன் பேசினேன். விரைவில் அந்த மாநாடு நடக்கவுள்ளது.

பத்திரிகையாளர்களும் அங்கு வந்து உங்களிடம் உள்ள தகவல்களை தரவலாம். பத்திரிகையாளர்களாக அல்லாமல், சமூக அக்கறையாளர்களாக வரலாம். ஏனெனில் பத்திரிகையாளர்களிலும் சமூக அக்கறையுடையவர்களும் உள்ளார்கள், சவப்பெட்டி அரசியல் செய்பவர்களும் உள்ளனர்

இந்தியாவில் அகதிகளாக இருக்கும் மக்கள், இங்கு திரும்புவது பற்றி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். அவர்களை நான் விரைவில் சந்திக்கவுள்ளேன். அவர்களின் விருப்பத்தை அறிந்து, இரண்டு நாட்டு அரசுகளுடனும் பேசி முடிவு காண வேண்டும். அந்த பிரச்சனையை தீர்க்க மக்கள் எனக்கு ஆணையை தர வேண்டும்.

ஒருநாள் அமைச்சராக இருந்தபோது, தென்னிந்தியாவிற்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கையெடுத்தேன். ஒருநாள் அமைச்சராக இருந்ததால் அது முடியவில்லை. 2,3 நாள் அமைச்சராக இருந்திருந்தால் செய்திருக்கலாம்.