தமிழ் ஈழம் என்பது இலங்கையின் ஒரு பகுதியாகும். இது பௌத்த காலத்திற்கு முன்னரே தமிழ் பேசும் பகுதியாகும். அவ்வளவுதான். ஈழத்தில் தமிழ் பேசும் ஈழம் மற்றும் சிங்கள மொழி பேசும் ஈழம் ஆகியவை உள்ளன என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்.
மகாவம்சம் குறித்தும், தமிழர்களின் தொன்மை குறித்தும் விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் சிங்களவர் மத்தியில் சர்ச்சையை தோற்றுவித்திருக்கும் நிலையில், மேலும் பல அவசியமான வரலாற்று உண்மைகளை புட்டுப்புட்டு வைத்துள்ளார் விக்னேஸ்வரன்.
இன்று அவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட கேள்வி பதில் பகுதியில் இவை குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் தொன்மையை ஆய்வறிக்கையாக அளித்தால் இலங்கை பல்கலைகழகங்கள் ஏற்றுக்கொள்ளாது என்பதற்காக கலாநிதி இந்திரபால சமர்ப்பித்த ஆய்வறிக்கைக்கு மேலதிகமான தகவல்களை பின்னர் புத்தகமாக எழுதினார். அதுபோல, யாழ்ப்பாண வைபவமாலையை எழுதியவர் இன்று உயிருடன் இருந்திருந்தால், அதை மாற்றி எழுதியிருப்பார் என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது கேள்விபதில் பகுதியின் ஒரு பகுதி இது.
மகாவன்சா என்பது பாலியில் எழுதப்பட்ட ஒரு புனைகதை மட்டுமே என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். எந்த உண்மையின் அடிப்படையில் அதை
கூறுகிறீர்கள்?
பதில்: நான் புனைகதை என்று சொல்லவில்லை. இது புத்தமதத்தை மகிமைப்படுத்துவதற்காக பாலியில் எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை.
ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் பௌத்த மதத்தை மகிமைப்படுத்தும் விதமாக எழுதியுள்ளார். ஒரு வரலாற்றாசிரியர் அப்படிச் செய்யமாட்டார். அவரது நோக்கம் மத வரலாற்றை எழுதுவதல்ல.
மகாவம்சத்தில் உள்ளவை வரலாறு மற்றும் தொல்பொருள் மதிப்பு மிக்க கல்வெட்டு தகவல்கள் மற்றும் விவரங்கள் பலவற்றில் காணப்படுகின்றன
இலங்கை, இந்திய வரலாறு மற்றும் பண்டைய நிகழ்வுகள் பற்றிய புத்தகங்களில் மகாவம்சத்தின் உள்ளடக்கங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. அப்படியிருக்க, மகாவம்சம் பாலியில் எழுதப்பட்ட புனைகதையென நீங்கள் எப்படி குறிப்பிடுவீர்கள்?
பதில்: நாங்கள் சில நேரங்களில் அறியப்பட்ட சில தகவல்களுடன் புனைகதைகளை எழுதுகிறோம். நான் ஒரு கற்பனையான சிறுகதையை எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். திரு. எக்ஸ் ஒரு குறிப்பிட்ட நாளில் காலி வீதியில் நடந்து கொண்டிருந்தார் என. காலி வீதி இருப்பதான தகவல் உண்மையாக இருக்கலாம்.
அந்த குறிப்பிட்ட நாளில் காலி வீதியில் நடப்பதாக சம்பவம் புனைகதையாக இருக்கும்.
அந்த நேரத்தில் இருந்த சில பாரம்பரிய கதைகளை மஹானாம அதில் இணைத்ததன் மூலம், அதற்கு வரலாற்று மதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.
இன்றும் சில பத்திரிகையாளர்கள் உள்ளார்கள். உண்மைகளுடன் சேர்த்து சில கதைகளையும் இணைப்பவர்கள். அவர்களின் முழு கட்டுரையும் உண்மையானதை போன்ற தோற்றத்தை கொடுக்கும்.
மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்ட எல்லா நிகழ்வுகளும் உண்மையானவை என்று நீங்கள் கூறுகிறீர்களா? அதை என்னிடம் சொல்லுங்கள், பின்னர் உங்கள் கேள்விக்கு இன்னும் விரிவாக பதிலளிக்க முடியும்.
நம் நாட்டைப் பற்றி வெளிநாட்டவர்கள் எழுதிய பல புத்தகங்கள் உள்ளன. அதில் இலங்கை வரலாறு உள்ளது. ஃபா ஹீன் எழுதிய புத்தகத்திலும் பல தகவல்கள் உள்ளன. ஆனால் எந்தப் புத்தகமும் தமிழீழத்தைப் பற்றி கூறவில்லை.
பதில்: தமிழ் ஈழத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அது இப்போது கூட உள்ளது. ஈழம், லங்கா, சிலோன், செரண்டிப் போல அதுவும் மற்றொரு பெயர். இலங்கை இருப்பதால் ஈழமும் இருக்கிறது.
தமிழ் ஈழம் என்பது இலங்கையின் ஒரு பகுதியாகும். இது பௌத்த காலத்திற்கு முன்னரே தமிழ் பேசும் பகுதியாகும். அவ்வளவுதான். ஈழத்தில் தமிழ் பேசும் ஈழம் மற்றும் சிங்கள மொழி பேசும் ஈழம் ஆகியவை உள்ளன. சிங்கள மக்கள் இதுவரை தவறான தகவல்களைப் பெற்றுள்ளனர்.
தமிழர்களின் வரலாறு பற்றி எழுதப்பட்ட மிகப் பழமையான புத்தகமாக யாழ்ப்பாண வைபவமாலை கருதப்படுகிறது. அந்த புத்தகத்தின் ஆரம்பப் பகுதிகளில் சொல்லும் தகவல்களும், மகாவம்சத்தில் சொல்லப்படும் தகவல்களும் பெருமளவில் ஒன்றாக உள்ளன. மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போலவே விஜயனைப் பற்றியும் கூறுகிறது. இந்த விடயத்தில் உங்கள் கருத்துக்கள் என்ன?
பதில்: யாழ்ப்பாண வைபவமலை ஒரு வரலாற்றாசிரியர் எழுதிய புத்தகம் அல்ல. மகாவம்சம் உண்மையானது என நினைத்து, அதன் உள்ளடக்கங்களை அவர் குறிப்பிட்டிருப்பார்.
பௌத்த காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே தமிழர்கள் இருந்ததை நிரூபிக்கும் ஏராளமான சான்றுகள் கடந்த பத்து ஆண்டுகளில் அல்லது அதற்கு முன்னராக வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பேராசிரியர் இந்திரபாலா 1960 களில் தனது முனைவர் பட்டத்திற்கான தனது ஆய்வறிக்கையை எழுதினார். சோழர் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் தமிழர்கள் இருந்த உண்மையைச் சொன்னால் அவர்கள் அவருக்கு இலங்கை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வழங்க மாட்டார்கள்.
எனவே சோழர் ஆக்கிரமிப்பின் போது மட்டுமே தமிழர்களின் நிரந்தர குடியேற்றங்களுக்கான உண்மையான ஆதாரங்கள் கிடைத்தன என்றார்.
பேராசிரியர் இந்திரபாலா தனது அடுத்தடுத்த புத்தகத்தை 2005 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிலிருந்து எழுதினார். பௌத்த காலத்திற்கு முந்தைய தமிழ் பரம்பலை பற்றிய முழு விபரத்தையும் அதில் எழுதினார்.
யாழ்ப்பாண வைபவமலை 2400 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட காலத்தை உள்ளடக்கியிருந்தாலும், அதில் 20 மன்னர்களின் விவரங்கள் மட்டுமே உள்ளன. இதைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?
பதில்: யாழ்ப்பாண வைபவமலை பற்றி நான் மேலும் கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை. யாழ்ப்பாண வைபவமலையை எழுதியவர் இன்று வாழ்ந்திருந்தால், பேராசிரியர் இந்திரபாலா தனது முந்தைய புத்தகத்தின் உள்ளடக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, விரிவான புத்தகத்தை எழுதியதை போல, இவரும் இன்னொரு புத்தகத்தை எழுதியிருப்பார். உங்களால் உண்மையை நீண்ட நேரம் மறைத்து வைக்க முடியாது.