மாயமான சிறுவன் குப்பை கிடங்கில் அழுகிய நிலையில் – நண்பர்களே செய்த மோசச் செயல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 10, 2019

மாயமான சிறுவன் குப்பை கிடங்கில் அழுகிய நிலையில் – நண்பர்களே செய்த மோசச் செயல்

திருச்சி அருகே கடந்த சில நாட்களாக மாயமான சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பெரியார் தெருவைச்சேர்ந்தவர் அலியார். இவரது மனைவி மெகர் நிஷா. இவர்களது மகன் அப்துல் வாகித் (வயது 12). அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். படிப்பு சரியாக வராததால் இடையில் படிப்பை நிறுத்தியதுடன், வீட்டில் இருந்து வந்தான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற அப்துல்வாகித் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மெகர் நிஷா தனது மகன் காணாதது குறித்து அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், படிப்பு சரியாக வராததால் வீட்டை விட்டு சென்றானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.


இந்த நிலையில் இன்று காலை அரியமங்கலம் குப்பை கிடங்கில் சிறுவன் ஒருவன் பிணமாக கிடப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்தரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது குப்பை கிடங்கில் உள்ள தண்ணீர் தொட்டியில் மாயமான அப்துல் வாகித் பிணமாக கிடந்தான்.

மேலும் அவனது உடலில் காயங்கள் இருந்தது. இதனால் மர்ம நபர்கள் அவனை கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் போட்டு குப்பைகளால் மூடியுள்ளது தெரிய வந்தது. மேலும் உடல் அழுகியிருந்தது. இதனால் அவன் இறந்து 3 நாட்கள் வரை ஆகியிருக்கும் என தெரிகிறது.


அப்துல் வாகித்தை கொன்ற நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த இளவரசன் (18), சரவணன் (19), லோகேஷ் (16), வீராசாமி (16) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தனது நண்பரான அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மகன் முத்துக்குமார் (22) என்பவருடன் சேர்ந்து அப்துல் வாகித்தை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் அப்துல் வாகித் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

படிப்பை பாதியில் விட்ட அப்துல்வாகித், முத்துக்குமாருடன் நெருங்கி பழகியுள்ளார். முத்துக்குமார் பன்றி வளர்ப்பு தொழில் செய்து வந்துள்ளார். இதனால் அவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தொழில் போட்டி இருந்துள்ளது. இதனிடையே அப்துல்வாகித், முத்துக்குமாரின் எதிராளிகளுடனும் நெருங்கி பழகியுள்ளார். இது முத்துக்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் இரும்பு பொருட்களை திருடி விற்ற பணத்தை பங்கு பிரிப்பதில் முத்துக்குமாருக்கும், அப்துல் வாகித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் முத்துக்குமார் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அப்துல் வாகித்தை கொலை செய்துள்ளதும், பின்னர் உடலை அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் போட்டு குப்பைகளால் மூடியுள்ளதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவான முத்துக்குமாரை தேடி வருகின்றனர். மாயமான சிறுவன் நண்பர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இதனிடையே அப்துல் வாகித் உடலை மீட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்