மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிகரித்த மருந்தை வழங்கியதால் மாணவி (09.12.2019) திங்கட்கிழமை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அறிவித்ததுடன் விசாரணை இடம் பெற்றுவருவதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி காலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த உவைஸ் பாத்திமா ஜப்றா(வயது 14) எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவியான குறித்த மாணவி கடந்த வருடம் திடீரென புற்று நோயினால் பாதிக்கப்பட்ட போது மகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக் கொண்டு சென்று புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தோம்.
சிகிச்சையின் பயணாக மகள் தேறி வந்த நிலையில் மாதார்ந்தம் கிளிணிக் சென்று வந்தோம் இந்த நிலையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையும (3.12.2019); கிளிணிக் சென்றபோது மகள் ஜப்றாவுக்கு மருந்து வழங்கப்பட்டது
2 மில்லி மருந்தே தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது ஆனால் அன்றைய தினம் வைத்தியர் 20 மில்லி மருந்தை வழங்குமாறு வைத்திய அறிக்கையில் எழுதியுள்ளார்.
2 மில்லி மருந்து வழங்குவதற்கு பதிலாக 20 மில்லி மருந்தை வழங்கி விட்டார்கள். பின்னர் மயக்க மடைந்த மகளை அன்றைய தினம் இரவேடு இரவாக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கும் சிகிச்சை பயணளிக்காததால் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கடந்த சனிக்கிழமை (07) கொண்டு வந்து அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் (09.12.2019) திங்கட்கிழமை மாலை உயிரிழந்தார்.
இது வைத்தியர் விட்ட பிழையினாலேயே எங்களது மகளுக்கு இந்த கதி நடந்துள்ளது. இன்று நாங்கள் ஒரு பிள்ளையை இழந்து நிற்கின்றோம். எங்களுக்கு நடந்த இவ்வாறான சம்பவம் இன்னுமொரு பிள்ளைக்கு நடக்க கூடாது. குறித்த சிறுமியின் பெற்றோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர். அத்தோடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கேட்ட போது இந்த சிறுமி எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 3 ம் திகதி புற்று நோய்கு மருந்து ஏற்றப்பட்ட போது இடம்பெற்ற தவறு காரணமாக பக்கவிளைவுகள் ஏற்பட்டு அதற்குரிய சிகிச்சை பலனின்றி நேற்று 9 ம் திகதி மாலை உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதுடன் நிகழ்ந்த தவறு தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணை இடம்பெற்று வருகின்றது அதேவேளை தவறுகள் இடம்பெறும் பட்சத்தில் உரிய விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது இருந்த போதும் எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான தவறுகள் இடம்பெறும் பட்சத்தில் எனக்கு தெரியப்படுத்தும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
குறித்த மாணவியின் பிரதேசமான காங்கேயேனோடை பிரதேசத்தில் துக்க தினம் அனுஸ்டிக்கப்படுவதுடன் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு பதாதைகளும் கட்டப்பட்டுள்ளதுடன் பள்ளிவாயல்களில் உயிரிழந்த பிள்ளைக்கான பிராத்தனைகளும் இடம் பெற்றன.
இதேவேளை கடந்த மாச் மாதத்தில் சிறுவன் ஒருவருக்கும் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டு உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றதுடன் பாதிக்கப்பட்ட பெற்றோர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் வழக்கு இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது