சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டனர். அதனால் சந்தேகநபர்கள் இருவரது விளக்கமறியலும் வரும் 20 ஆம் திகதி வரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோப்பாய், இருபாலையில் கடந்த மாதம் 15 ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
கோப்பாய் இருபாலையில் ஒழுங்கை ஒன்றில் நின்று 14 வயதுச் சிறுமியும் அவரது நண்பரும் கதைத்துக் கொண்டிருந்த போது, அந்த வழியால் வந்த இருவர், அவர்களை மிரட்டியுள்ளனர்.
மதுபோதையில் இருந்த அந்த நபர்கள் இருவரும் சிறுமியின் நண்பரைத் தாக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் சிறுமியை அச்சுறுத்தி தனது மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றதுடன், மற்றையவர் சிறுமியின் நண்பரை மிரட்டி தடுத்து வைத்திருந்துள்ளார். சிறுமியை ஒதுக்குப் புறம் ஒன்றுக்கு அழைத்துச் சென்ற ஒருவர் அவரை சித்திரவதை செய்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். வீடு திரும்பிய சிறுமி, சம்பவம் தொடர்பில் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயாரும் கோப்பாய் பொலிஸ் கடந்த 23 ஆம் திகதி முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
சிறுமியின் நண்பரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த 26 ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர். சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்திருந்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்த விண்ணப்பம் செய்தனர்.
அதன் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் இன்று (10) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ. பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். அடையாள அணிவகுப்பை நடத்த மன்று உத்தரவிட்டது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அடையாள அணிவகுப்புக்கு சந்தேகநபர்கள் முற்படுத்தப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது நண்பரும் தனித்தனியே அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர்களை அடையாளம் காண அழைக்கப்பட்டனர். சிறுமியும் அவரது நண்பரும் எந்தத் தயக்கமுமின்றி சந்தேகநபர்கள் இருவரையும் அடையாளம் காட்டினர். சந்தேகநபர்கள் இருவரது விளக்கமறியலும் வரும் 20 ஆம் திகதிவரை நீடித்து மன்று உத்தரவிட்டது.