சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடினால் வடக்கு கிழக்கில் அன்று துக்கதினம் – சிவாஜி எச்சரிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 31, 2019

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடினால் வடக்கு கிழக்கில் அன்று துக்கதினம் – சிவாஜி எச்சரிக்கை

இலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அரசு கூறுமாயின் வடக்கு கிழக்கு மக்கள் அன்றைய நாளினை தேசிய துக்க தினமாக அனுஷ்ட்டிக்க நிர்ப்பந்திக்கப் படுவார்கள் என தமிழ்த் தேசிய கடசியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இவ்வாறான நடவடிக்கை இடம்பெற்றால் பல்லின மக்கள் இடையே பிளவுகள் ஏற்படும் எனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்று வந்த பின்னர் இனப் பிரச்சனைக்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. மாறாக சுதந்திர தினத்தன்று தனியே சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என கூறுகின்றனர்.

அவ்வாறான நிலைப்பாட்டில் அரசு இருக்குமானால் தமிழ் மக்கள் அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அனுஷ்ட்டிக்க நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் அரச,தனியார் திணைக்களங்கள்,பாடசாலைகள் போக்குவரத்து சேவைகள் என அனைத்தும் முடங்கும்.மாபெரும் கதவடைப்பு போராடடம் முன்னெடுக்கப்படும்.

புதிய அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டின் ஊடாக நாட்டில் வாழும் பல்லின மக்களுக்கு இடையில் பிளவுகள் ஏற்படும். தேசிய நல்லிணக்கம் வெகுவாக பாதிப்படையும்.கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கப்பட்டது.

குறிப்பாக சுதந்திர தினத்தில் கூட தமிழில் பாடப்பட்டது.அப்போதும் நாம் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.ஏனைய அனைத்து தமிழ் தேசிய கட்சியினரும் அதனை புறக்கணித்தனர்.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இனப் பிரச்சினையை தீர்ப்பதட்கான எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை. இப்போது அது தொடர்பில் பேசமுடியாது பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் என்கின்றனர்.

அந்த தேர்தல் முடிய மாகாண சபை தேர்தல் முடிந்ததும் பேசுவோம் என்பார்கள் பின்னர் அது முடிய வேறு ஒரு புதுக் காரணத்தை கூறுவார்கள் இவ்வாறே தீர்வை கடத்துவார்கள். அரசு இவ்வாறுதான் செயற்பட போகின்றது என்றால் நாம் சர்வதேச நாடுகளுடன் எமக்கான தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும். பயணிப்போம்.

இந்த நாடு பௌத்த சிங்கள நாடு என்று கூறுகின்றனர்.அப்படியானால் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள், கிறிஸ்தவ சிங்களவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனரா? எமக்கு இந்த நாட்டில் வாழ உரிமை இல்லையா? இது மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும்.

சுதந்திர தினம் அன்று சிங்கள மொழியில்தான் நீங்கள் தேசிய கீதம் பாடுவீர்கள் என கூறினால் வடக்கு கிழக்கில் தேசிய துக்க தினம் அனுஷ்ட்டிக்கப்படும்” என எச்சரித்தார்.