இலங்கை அரசியல் – 2019: ஒரு பார்வை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 31, 2019

இலங்கை அரசியல் – 2019: ஒரு பார்வை


ஜனவரி
ஜனவரி 18:
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுய சரிதை சீன மொழியில் வெளியிடப்பட்டது.
ஜனவரி 22
கொழும்பு கொள்ளுப்பிட்டியில், 115 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அமெரிக்கா மற்றும் ஆப்கான் நாட்டுப்பிரஜைகளும் அடங்கியிருந்தனர்.
ஜனவரி 27
கொழும்பில் இருந்து யாழ். காங்கேசன்துறை வரையிலான உத்தரதேவி ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு அன்று ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
ஜனவரி 28
பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அன்று மட்டுமல்லாமல் குறித்த விடயத்தின் அடிப்படையில் தொடர்ந்து வந்த பல நாட்களிலும், ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பெப்ரவரி
பெப்ரவரி 03
இலங்கையின் 71ஆவது சுதந்திர தினம் அடுத்த நாள் கொண்டாடப்படவிருந்த நிலையில், குறித்த நிகழ்வில் பங்கெடுக்க மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மட் சாலி மற்றும் அவரது பாரியார் இலங்கைக்கு விஜயம் செய்தனர்.
பெப்ரவரி 05
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு 2 மாதங்களில் தண்டனை நிறைவேற்றப்படும் என நாடாளுமன்றில் அறிவித்தார்.
எவ்வாறாயினும் அவரது ஆட்சிக்காலம் வரை எவருக்கும் குறித்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
பெப்ரவரி 05
அதே போதைப்பொருள் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவன் என அறியப்பட்ட மாகந்துர மதூஸ் மற்றும் அவரது குழு சார்ந்த 25 பேர் ஐக்கிய அரபு இராஜ்ய தலைநகர் அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
மார்ச்
மார்ச் 08
மகளிர் தினமான இத்தினத்தில் முழுக்க முழுக்க பெண் விமானப்பணியாளர்களால் இயக்கப்பட்ட விமானம் 177 பயணிகளுடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்து சிங்கப்பூரை சென்றடைந்தது.
குறித்த விடயம் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் புகழை பெற்றுக்கொடுத்தது.
மார்ச் 22
மவுசாகலை நீர்த்தேக்கப் பகுதியில் செயற்கையாக மழையை வரவைத்து மேற்கொண்ட பரிசோதனை வெற்றியளித்ததாக மின்சக்தி அமைச்சு அறிவித்தல் விடுத்தது.
மார்ச் 28
போதைப்பொருள் வர்த்தக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாக்கந்துரே மதூஷின் நண்பரான கஞ்சிப்பானை இம்ரான் என அறியப்படும், மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரான் நாடு கடத்தப்பட்டார்.
ஏப்ரல்
ஏப்ரல் 18
இலங்கையின் முதலாவது ஆய்வு செயற்கை கோள் இராவணா 1 அனைத்துலக விண்வெளி நிலையத்தை நோக்கி ஏவப்பட்டது.
ஏப்ரல் 21
இலங்கையின் பிரதான கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக்குண்டு தாக்குதலில், 253 பேர் பலியானதுடன், 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து அவர்களில் பலர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏப்ரல் 23
இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தாமே நடத்தியதாக சர்வதேச ரீதியாக இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பான ஐ .எஸ். அமைப்பு உரிமை கோரியது.
அதற்கு பின்னர் வந்த நாட்கள் தொடக்கம் இன்று வரை குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இலங்கையின் பல அரசியல் புள்ளிகள் இவ்விடயத்தில் முன்னிலையாகி சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.
மே
மே 05
அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவர் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் குற்றம் சாட்டப்பட்ட மாக்கந்துரே மதூஷ் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்புடன் கொழும்புக்கும் அழைத்து வரப்பட்டார்.
மே 19
இலங்கையிலுள்ள குவைத் தூதரகம் உள்ளிட்ட பல தூதரகங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
மே 23
நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
குறித்த விடுதலை எதிர்க்கட்சிகள் குறிப்பாக தமிழ் கட்சிகளினால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது.
அரசியல் கைதிகளின் விடுதலையினை தொடர்புபடுத்தி பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்தன.
ஜூன்
ஜூன் 12
ஈஸ்டர் தினத்தில் சேதமாக்கப்பட்ட கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மீள் புனரமைக்கப்பட்டு விசேட ஆராதனைகளுடன் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
ஜூன் 17
இலங்கையில் இருந்து ஏவப்பட்ட ராவணா 1 செய்மதி விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது.
ஜூன் 28
இலங்கையில் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டு, ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
ஜூலை
ஜூலை 02
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டபோது, அது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க தவறிய குற்றச்சாட்டில் அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 05
பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறை தண்டனை அனுபவித்து வந்த தெரணியகல பிரதேச சபை முன்னாள் தலைவர் சம்பிக்க விஜேசிங்க மீதான 4 குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 24 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஓகஸ்ட்
ஓகஸ்ட் 9
ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலை தாக்குதல் நடாத்திய தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் உள்ளிட்ட உறுப்பினர்களுடைய 134 மில்லியன் ரூபாய் பெறுமதியான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
ஓகஸ்ட் 19
பிணை முறி மோசடி வழக்கின் முதலாவது பிரதிவாதியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
ஓகஸ்ட் 19
இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.
செப்டம்பர்
செப்டம்பர் 13
நாட்டிற்குள் ஹெரோயின் கடத்தி வந்தார்கள் எனும் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரஜைகள் ஐவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி,  நீர்கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செப்டம்பர் 16
தெற்காசியாவின் அதி உயரமான தாமரை கோபுரம் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.
செப்டம்பர் 29
தேசிய மக்கள் இயக்கம் உட்பட சிவில் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தி, முன்னாள் இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான அறிவிப்பு வெளியானது.
ஒக்டோபர்
ஒக்டோபர் 17
இலங்கையின் மற்றொரு சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பலாலியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
நவம்பர்
நவம்பர் 10
சுவீடன் நாட்டு இளம் பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த ஜூட் ஜெயமாகா என்பவர் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
நவம்பர் 16
இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
நவம்பர் 17
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு, இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ தெரிவானார்.
நவம்பர் 19
இலங்கையின் 19ஆவது பிரதமரான தி.மு.ஜயரத்ன தனது 88ஆவது வயதில் காலமானார்.
டிசம்பர்
டிசம்பர் 18
வாகன விபத்து தொடர்பான குற்றசாட்டு ஒன்றில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 23
திருமணமான பெண்களுக்காக நடத்தப்படும் உலக அழகி போட்டியில், இலங்கையை சேர்ந்த கரோலைன் ஜூலி அழகிப்பட்டம் வென்றார்.
டிசம்பர் 27
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால் தனியார் வைத்தியசாலையில் வைத்து கைது செய்யபட்டார்.
டிசம்பர் 30
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.