பதுளையில் கூட்டமைப்பு களமிறங்குவது சதி; மும்மொழியையும் பேசக்கூடிய சகலகலாவல்லவர்களை தெரிவு செய்யுங்கள்: வடிவேல் சுரேஷ்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, December 26, 2019

பதுளையில் கூட்டமைப்பு களமிறங்குவது சதி; மும்மொழியையும் பேசக்கூடிய சகலகலாவல்லவர்களை தெரிவு செய்யுங்கள்: வடிவேல் சுரேஷ்!

நாடாளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு களமிறங்கப் போவதாக சுமந்திரன் தெரிவித்திருக்கிறார். இது திட்டமிட்ட சதி. பதுளையிலுள்ள சொற்ப வாக்குகளையும் உடைக்கும் முயற்சி. இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார் பதுளை எம்.பி, வடிவேலி சுரேஷ்.

பதுளையில் தற்போது இரண்டு தமிழ் எம்.பிக்கள் உள்ளனர். எதிர்காலத்தில் எமது சமூகம் சார்பில் மேலுமொருவரை அதிகரிக்க வேண்டும். மூன்று மொழிகளிலும் பேசக்கூடிய சகலகலாவல்லவர்களிற்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பசறை முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சின்னங்கள், வண்ணங்கள் எதுவாக இருந்தாலும் எமது மக்களின் எண்ணங்கள் ஒன்றாகவே உள்ளது. ஆகையினால் எமது சமூகம் சார்பாக பிரதிநிதிகளை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். என்னையே தெரிவு செய்யுங்கள் என நான் கூறவில்லை. என்னைவிட சிறப்பானவர்கள் பதுளை மாவட்டததில் இருக்கக்கூடும். ஆனால் பதுளை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய சகலகலவல்லவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுததான் எமது சமூகத்திற்கு பெருமை.

அமைச்சு பதவியோ, எம்.பியோ எனக்கு பெரிதல்ல. எனது சமூகமே எனக்கு முக்கியம். எமது சமூகத்தின் மத்தியில் அமைச்சராகவோ, எம்.பியாகவோ நான் இருப்பதில்லை. எனது சமூகத்தின் காவல்க்காரனாகவே இருக்கிறேன்.



சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எமது சமூகம் வளமாக இருந்தால்தான் நாம் அமைச்சராகவும், எம்.பியாகவும் இருக்க முடியும்.

பதுளை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு களமிறங்கப் போவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதை திட்டமிட்ட சதியாகவே நான் பார்க்கிறேன். பதுளை மாவட்டத்திலிருக்கும் சொற்ப வாக்குகளையும் சிதறடிக்கும் வகையிலேயே இச் செயற்பாடு இருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் நாடு திரும்பியதும், எமது பலத்த கண்டனத்தை தெரிவித்து, கூட்டமைப்பினர் பதுளை மாவட்டத்தில் களமிறங்குவதை தடுத்து நிறுத்துவேன்.

நுவரெலியா மாவட்டத்தில் எமது சமூகம் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டுவது சுலபம். ஆனால் பதுளை அப்படியல்ல. சிரமத்தின் மத்தியிலேயே எம்மவர்கள் தெரிவாக முடியும்.

சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் ஜனாதிபதியொருவர் வெற்றி பெற முடியாதென்ற நிலைப்பாட்டிலேயே கடந்த தேர்தல் வரை இருந்தோம். ஆனால் எமது சமூக நிலைப்பாட்டை சுக்குநூறாக உடைத்து, பெரும்பான்மை சமூகத்தினரால் மட்டும் ஜனாதிபதியாக வெற்றிபெற முடியுமென்பதை தற்போதைய ஜனாதிபதி ஏற்படுத்தி விட்டார்.

இந்த நிலைமை நாடாளுமன்ற தேர்தலிலும் ஏற்படக்கூடிய நிலைமை உள்ளது. ஆகவே எமது சமூகத்தினர் மிக எச்சரிக்கையாக செயற்பட வேண்டும். எமது சொற்ப வாக்குகளையும் சிதறடிக்காமல், மும்மொழிகளிலும் பேசக்கூடிய சகலகலாவல்லவர்களை தெரிவு செய்து அவர்களிற்கு வாக்களிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் பதுளை பகுதியின் குயின்ஸ்டவுன்,தெல்பத்தை பெருந்தோட்டங்களில் இராணுவ முகாம்கள் அமைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து, இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்தினேன். பெருந்தோட்டங்களிற்குள் இராணுவ முகாம் அமைக்கப்பட்டால் எமது மக்கள் பெரும் சிரமங்களை சந்திப்பார்கள்.

எமது சமூகத்திற்கு அநீதியோ, பாதிப்போ ஏற்படுமானால் என்னால் அதை ஜீரணிக்க முடியாது. நல் வழியிலோ, தீய வழியிலோ செயற்பட்டு எமது மக்களை பாதுகாக்க பின்னிற்க மாட்டேன்.

பெருந்தோட்ட முகாமைத்துவத்தினருடனோ, தோட்ட நிர்வாகிகளுடனோ எனக்கு உறவுகள் இல்லை. அவர்களின் தயவு எனக்கு தேவையுமில்லை.