இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்களே: கோட்டாவிற்கு பதிலடி கொடுத்த விக்னேஸ்வரன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, December 2, 2019

இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்களே: கோட்டாவிற்கு பதிலடி கொடுத்த விக்னேஸ்வரன்!

பெரும்பான்மை சமூகம் விரும்பாத எதனையும் இலங்கையில் செய்ய முடியாது என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ திரும்பத் திரும்ப கூறிவருகிறார். இலங்கையில் உள்ள எல்லா இன மக்களும் சமனாகக் கருதப்படவில்லை என்பதற்கு இந்தக் கூற்றே சிறந்த உதாரணமாகக் காணப்படுகின்றது. வட கிழக்குத் தமிழ் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள். சிங்கள மொழி நடைமுறைக்கு வந்தது கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டில், அதற்கு முன்னர் சிங்கள மொழி பேசுவோர் இலங்கையில் இருந்ததில்லை. வடகிழக்கில் இன்றும் நாமே பெரும்பான்மையினர். பின் எவ்வாறு சிங்களப் பெரும்பான்மையினர் விரும்பாத எதனையும் இலங்கையில் செய்ய முடியாது என்று எமது ஜனாதிபதி கூறலாம் என காரசாரமாக கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்.

இன்று (2) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை இந்திய பிரதமர் கேட்டிருப்பது தமிழ் மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கின்றது என்பது உண்மையே. ஆனால், இலங்கை இனப்பிரச்சினைக்கு நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் வகையில் இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய அடிப்படையிலான சமஷ்டி தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கு இந்தியா விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே எமது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

வெளிநாட்டு உள்நாட்டு சட்ட நிபுணர்கள் சேர்ந்து இலங்கை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு நிரந்தர அரசியல் யாப்பை வெகுவிரைவில் தயாரிக்க வேண்டுமென்பதே எம் மக்களின் பரந்துபட்ட எதிர்பார்ப்பு.ஆனால் இன்று இலங்கை அரசியலமைப்பின் ஒரு பகுதியாக காணப்படும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது. தற்போதைக்கு இது முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும். அத்துடன் அதன் நடைமுறைப்படுத்தலுக்கு பாதகமாக அமைந்திருக்கும் 1992ம் ஆண்டின் 58ம் இலக்கச் சட்டம் போன்றவை உடனே கைவாங்கப்பட வேண்டியது கட்டாயமாகின்றன. மேலும் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும்.

தரப்பட்டிருக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இவை தந்தால்க் கூட 13 ஆவது திருத்த சட்டம் எந்த அடிப்படையிலும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளை மற்றும் உடனடியான பிரச்சினைகளைக் கூட தீர்க்கமாட்டாது.எனவே தீர்ப்பதற்குப் போதிய அதிகாரத்தை வழங்கும் வகையில் 13வது திருத்தச் சட்டம் காணப்படாமையினால் இயன்றளவு விரைவாக நிலையான தீர்வு ஒன்றை கொண்டுவருவதற்கான தலையீட்டை இந்தியா மேற்கொள்ளவேண்டும் என்பதையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். நாம் ஒற்றையாட்சிக்குள் தெற்கில் இருக்கும் பெரும்பான்மை மக்களின் கைப்பொம்மையாக 13ம் திருத்தச் சட்டத்தினால் மாற்றப்பட்டிருப்பதை யாவரும் உணர வேண்டும். ஆனால் வடகிழக்கில் தமிழ்ப் பேசும் மக்களே பெரும்பான்மையானவர்கள் என்பதையும் யாவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எமது நிலங்கள், மொழி, கலாச்சாரம், வாழ்வு முறை, பாரம்பரியம், மதத் தலங்கள் யாவும் பெரும்பான்மை மக்கள் ஒற்றையாட்சியின் கீழ் பெற்றுக் கொண்டுள்ள அதிகாரங்களால் இன்று பாதிக்கப்பட்டு வருகின்றன. எமது தனித்துவம் வெகுவிரைவில் மறையும் நிலைமை எம்மை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நாம் உணர வேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்கள் முன்னெப்போதையும்விட மோசமான அடக்கு முறைக்குள் அகப்பட்டுள்ளனர். அவர்களின் இருப்பும் அடையாளமும் முற்றாக அழிந்து போகும் ஆபத்துக்குள் அவர்கள் தற்போது இருந்து வருவதை இந்தியா உணர வேண்டும். இந்தியாவே எமது பாதுகாப்பு அரணாக தற்போது இருக்கின்றது. தமது இன்னல்கள் துன்பங்களுக்கு முடிவுகட்டி எமது வரலாற்றுக்கால கீர்த்தியையும் பெருமையையும் நாம் நிலைநாட்டும் வகையில் இந்தியா காத்திரமான ஒரு தலையீட்டைச் செய்யும் என்று எமது மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றார்கள். இந்தியப் பிரதமர் 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் கூட்டு சமஷ்டி அடிப்படையிலான ஒரு ஆட்சி முறை குறித்து பிரஸ்தாபித்திருந்தமை தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை அளித்திருந்தது. அதனை இத்தருணத்தில் இந்தியத் தலைவர்களுக்கு நினைப்பு ஊட்ட வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது. முக்கியமாக இதனை இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ திரு.சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது. அவர் இங்கு பதவிகள் வகித்தவர். எமது நிறை குறைகளை அறிந்தவர்.13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பது ஒரு கையினால் சிறிதளவு அதிகாரத்தைக் கொடுத்து மறு கையினால் அதனை எடுத்துக்கொள்ளும் ஒரு சட்டக் கையாளுகை என்பதை வட மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் நான் தெளிவாகவே புரிந்துகொண்டிருந்தேன். தமிழ் பேசும் மக்களின் நீண்ட கால நியாயபூர்வமான அரசியல் கோரிக்கைகளைக் கிஞ்சித்தும் திருப்திசெய்யும் வகையில் ஒற்றையாட்சி அமைப்புக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் அமையவில்லை. அபிவிருத்திகள் கூட எம் மக்கள் நினைத்தவாறு நடைபெற இடமில்லை. யாவையும் மத்தியின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றது.

அதிகாரப் பரவலாக்கம் என்று கூறினாலும் பல்வேறு குறைபாடுகளை 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநரே நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றார். நான் முதலமைச்சராக இருந்தபோது நான் சில அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்தமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை இதற்கு ஒரு சிறந்த உதாரணம். முதலமைச்சர் தீர்மானங்களை ஆளுநர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சட்டம் எதிர்பார்த்திருக்க முதலமைச்சரின் தீர்மானத்தை வர்த்தமானியில் ஆளுநர் தனக்கே தெரிந்த காரணங்களுக்காகப் பிரசுரிக்காது விட்டமையால், ஆளுநருக்கே அமைச்சர்களை நியமிக்கும் மற்றும் பதவி இறக்கும் அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கூறுமளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

ஜனாதிபதியின் கையாளான ஆளுநரின் பிழைகளைத் தட்டிக் கேட்க நீதிமன்றங்களே தயங்குகின்றன. ஜனாதிபதியின் கைகளிலேயே மாகாண சபையைக் கலைக்கும் அதிகாரம் இருக்கிறன்து. ஆளுநரின் அதிகாரம் மற்றும் அவரின் செயற்பாடுகள் ஜனாதிபதியினால் கட்டுப்படுத்தப்படக்கூடியன. அவ்வாறெனின் குறித்த சட்டத்தின் கீழான அதிகாரப் பரவலாக்கத்தின் நோக்கம் தான் என்ன? வெறும் கண்துடைப்பே என்பது எனது பார்வை மற்றும் ஆளுநரின் அனுமதி இன்றி மாகாண சபையின் நிதியத்தை மாகாண சபை கையாள முடியாது. நான் முதலமைச்சராக இருந்த போது முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்குப் பகீரதப் பிரயத்தனங்கள் செய்தபோதுங் கூட அரசாங்கம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.மேலும் வெண்ணை திரண்டு கொண்டு வந்த போது தாழியை உடைத்தது போல் பழங்கள், மரக்கறிகளை வன்னியில் பயிர் செய்து அவற்றை ஏற்றுமதி செய்ய நாம் பாடுபட்டு உருவாக்கிய செயற்றிட்டம் ஒன்று காணியின் ஒரு பகுதி வன இலாகாவிற்கு சொந்தம் என்ற ஒரு புனைந்துரைக்கப்பட்ட கூற்றின் மூலம் தடை செய்யப்பட்டது.

முழு நாட்டிற்கும் வரவிருந்த பொருளாதார நன்மை மத்திய அரசாங்கத்தின் குறுகிய காழ்ப்புணர்ச்சி எண்ணங்களால் நடைமுறைப்படுத்தப்படாது போனது. வடமாகாணம் தானாக விருத்தியடைவதை மத்தி விரும்பவில்லை என்பது கண்கூடு.

அடுத்து பொலிஸ் மற்றும் ஒழுங்கு தொடர்பிலான அதிகாரம் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. காணி உட்பட பல்வேறு அதிகாரங்களும் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி வசமே இருக்கின்றன. இந்த 13 ஆவது திருத்த சட்டத்தின் வழியாகவே மத்திய அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்களும் அதிகார சபைகளும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களைப் பெருமளவில் அபகரித்துள்ளன. அவை எம் பிரதேசங்களில் பௌத்த மயமாக்கலிலும் ஈடுபட்டுள்ளன. நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நடைபெறுவதை இன்று நாடறியும். இவ்வாறான பௌத்த பிக்குகளின் கெடுபிடிகள் வட கிழக்கில் தொடருமானால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வட கிழக்குத் தமிழ் மக்கள் பௌத்தத்தைக் கைவிட்டு தமது முன்னைய மதமான சைவத்திற்குத் திரும்பிய எமது மக்களை மீண்டும் பௌத்தத்திற்குள் பலாத்காரமாக மதமாற்றம் செய்வதாக ஆகிவிடும்.

இத்தகைய குறைபாடுகள் காரணமாகவே இந்தத் திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் தமிழ் தலைமைகள் மீண்டும் மீண்டும் இதனை நிராகரித்து வந்துள்ளனர். முதலில் 1987ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 28ந் திகதி எமது எதிர்ப்பு இந்தியப் பிரதமர் இரஜீவ் காந்திக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன் பின் தொடர்ந்து எமது குறைகளை அரசாங்கத்திற்கும் அகில நாடுகளுக்கும் எடுத்தியம்பி வருகின்றோம். ஆகவே, 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோருவதன் மூலம் இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யலாம் என்றோ அல்லது அவர்களின் தனித்துவத்தை நிலை நிறுத்தலாம் என்றோ அல்லது அவர்களின் நீண்டகால நியாயபூர்வமான அபிலாஷைகளை பூர்த்திசெய்யலாம் என்றோ இந்தியா எதிர்பார்க்க முடியாது. வேண்டுமெனில் முழுமையான ஒரு தீர்வை நோக்கி நடக்க திருத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டமானது தற்காலிகமாகப் பாவிக்கப்படலாம். 13வது திருத்தச் சட்டம் இன்று இல்லையென்றால் அடுத்த நாளே பெரும்பான்மையினத்தின் முழுமையான ஆக்கிரமிப்பு வட கிழக்கில் நடைபெறும்.

அதேவேளை, தொடர்ந்து வரும் இலங்கை அரசாங்கங்களின் சந்தர்ப்பவாத மன மாற்றங்களோ அல்லது சந்தர்ப்பவாத அணுகுமுறைகளோ இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை நீண்டகால அடிப்படையில் உறுதி செய்ய உதவாது என்பதை இந்தியா புரிந்துகொண்டுள்ளது என்பதே எமது கூர்நோக்கு. ஆகவே, நீண்டகால அடிப்படையில் இலங்கையில் தமிழ் மக்களின் நிலையான பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இந்திய நலன்களை உறுதிப்படுத்தும் வகையிலும் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.

அதேவேளை, பெரும்பான்மை சமூகம் விரும்பாத எதனையும் இலங்கையில் செய்யமுடியாது என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ திரும்பத் திரும்ப கூறிவருகிறார். இலங்கையில் உள்ள எல்லா இன மக்களும் சமனாகக் கருதப்படவில்லை என்பதற்கு இந்தக் கூற்றே சிறந்த உதாரணமாகக் காணப்படுகின்றது. வட கிழக்குத் தமிழ் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள். சிங்கள மொழி நடைமுறைக்கு வந்தது கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டில், அதற்கு முன்னர் சிங்கள மொழி பேசுவோர் இலங்கையில் இருந்ததில்லை. வடகிழக்கில் இன்றும் நாமே பெரும்பான்மையினர். பின் எவ்வாறு சிங்களப் பெரும்பான்மையினர் விரும்பாத எதனையும் இலங்கையில் செய்ய முடியாது என்று எமது ஜனாதிபதி கூறலாம்?

அவ்வாறெனின் இலங்கையில் தற்போது பெரும்பான்மை சிங்கள மக்களின் வல்லாட்சி பரிணமித்துவிட்டதா? நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களும் இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி வாக்களித்துள்ளமை சிங்கள மற்றும் தமிழ் மக்களின் திரட்சிகள் எதிர் எதிர் அணுகுமுறைகளில் இருப்பதையும் அவர்களுக்கு இடையிலான முரண் நிலை கூர்மை அடைந்திருப்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வு விரைந்து காணப்படவேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துவதுடன் இந்தியாவின் பாதுகாப்பும் இந்தத் தீர்விலேயே தங்கி உள்ளது என்பதையும் நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் என்றுள்ளது