13ஆவது திருத்தச் சட்டம் எந்த அடிப்படையிலும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகள் மற்றும் உடனடியான பிரச்சினைகளைக் கூட தீர்க்கமாட்டாது என வட.மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மோசமான அடக்குமுறைக்குள் தமிழ் மக்கள் காணப்படுகின்ற நிலையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை பூர்த்திசெய்யலாம் என இந்தியா எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாரம் ஒரு கேள்விக்கான பதிலிலில் பாரதப் பிரதமர் 13ஆவது திருத்தச் சட்டத்தை வலியுறுத்தியிருப்பது குறித்து ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய பிரதமர் கேட்டிருப்பது தமிழ் மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கின்றது.
ஆனால், இலங்கை இனப் பிரச்சினைக்கு நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய அடிப்படையிலான சமஷ்டி தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கு இந்தியா விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
வெளிநாட்டு, உள்நாட்டு சட்ட நிபுணர்கள் சேர்ந்து இலங்கை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு நிரந்தர அரசியல் யாப்பை வெகுவிரைவில் தயாரிக்க வேண்டுமென்பதே எம் மக்களின் பரந்துபட்ட எதிர்பார்ப்பு.
ஆனால் இன்று இலங்கை அரசியலமைப்பின் ஒரு பகுதியாக காணப்படும் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது. தற்போதைக்கு இது முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும்.
அத்துடன் அதன் நடைமுறைப்படுத்தலுக்கு பாதகமாக அமைந்திருக்கும் 1992ஆம் ஆண்டின் 58ஆம் இலக்கச் சட்டம் போன்றவை உடனே கைவிடப்பட வேண்டியதும் கட்டாயமாகின்றன.
மேலும் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். தரப்பட்டிருக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் இவற்றை தந்தால் கூட 13ஆவது திருத்தச் சட்டம் எந்த அடிப்படையிலும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகள் மற்றும் உடனடியான பிரச்சினைகளைக் கூட தீர்க்கமாட்டாது.
எனவே தீர்ப்பதற்குப் போதிய அதிகாரத்தை வழங்கும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் காணப்படாமையினால் இயன்றளவு விரைவாக நிலையான தீர்வு ஒன்றை கொண்டுவருவதற்கான தலையீட்டை இந்தியா மேற்கொள்ளவேண்டும் என்பதையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
நாம் ஒற்றையாட்சிக்குள் தெற்கில் இருக்கும் பெரும்பான்மை மக்களின் கைப்பொம்மையாக 13ஆம் திருத்தச் சட்டத்தினால் மாற்றப்பட்டிருப்பதை யாவரும் உணர வேண்டும்.
ஆனால் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையானவர்கள் என்பதையும் யாவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எமது நிலங்கள், மொழி, கலாசாரம், வாழ்வு முறை, பாரம்பரியம், மதத் தலங்கள் யாவும் பெரும்பான்மை மக்கள் ஒற்றையாட்சியின் கீழ் பெற்றுக் கொண்டுள்ள அதிகாரங்களால் இன்று பாதிக்கப்பட்டு வருகின்றன. எமது தனித்துவம் வெகுவிரைவில் மறையும் நிலைமை எம்மை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நாம் உணர வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்கள் முன்னெப்போதையும் விட மோசமான அடக்கு முறைக்குள் அகப்பட்டுள்ளனர். அவர்களின் இருப்பும் அடையாளமும் முற்றாக அழிந்து போகும் ஆபத்துக்குள் அவர்கள் தற்போது இருந்து வருவதை இந்தியா உணர வேண்டும். இந்தியாவே எமது பாதுகாப்பு அரணாக தற்போது இருக்கின்றது.
தமது இன்னல்கள், துன்பங்களுக்கு முடிவுகட்டி எமது வரலாற்றுக்கால கீர்த்தியையும் பெருமையையும் நாம் நிலைநாட்டும் வகையில் இந்தியா காத்திரமான ஒரு தலையீட்டைச் செய்யும் என்று எமது மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றார்கள்.
எமது குறைகளை அரசாங்கத்திற்கும் அகில நாடுகளுக்கும் எடுத்தியம்பி வருகின்றோம். ஆகவே, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோருவதன் மூலம் இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யலாம் என்றோ அல்லது அவர்களின் தனித்துவத்தை நிலை நிறுத்தலாம் என்றோ அல்லது அவர்களின் நீண்டகால நியாயபூர்வமான அபிலாஷைகளை பூர்த்திசெய்யலாம் என்றோ இந்தியா எதிர்பார்க்க முடியாது.
வேண்டுமெனில் முழுமையான ஒரு தீர்வை நோக்கி பயணிக்க திருத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டமானது தற்காலிகமாக பாவிக்கப்படலாம். 13ஆவது திருத்தச் சட்டம் இன்று இல்லையென்றால் அடுத்த நாளே பெரும்பான்மையினத்தின் முழுமையான ஆக்கிரமிப்பு வடக்கு கிழக்கில் நடைபெறும்.
அதேவேளை, தொடர்ந்து வரும் இலங்கை அரசாங்கங்களின் சந்தர்ப்பவாத மன மாற்றங்களோ அல்லது சந்தர்ப்பவாத அணுகுமுறைகளோ இந்தியாவின் தேசிய பாதுகாப்பை நீண்டகால அடிப்படையில் உறுதி செய்ய உதவாது என்பதை இந்தியா புரிந்துகொண்டுள்ளது என்பதே எமது கூர்நோக்கு.
ஆகவே, நீண்டகால அடிப்படையில் இலங்கையில் தமிழ் மக்களின் நிலையான பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இந்திய நலன்களை உறுதிப்படுத்தும் வகையிலும் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.