நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சனிக்கிழமை(14) முதல் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(20) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
-காணாமல் போய் உயிரிழந்தவர் நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றிய அன்ரனிஸ் நிமால் (வயது-30) என தெரிய வந்துள்ளது.
நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த நிலையில் கடந்த சனிக்கழமை (14) காலை 8 மணியளவில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார்.
இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அன்று இரவு 11 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததோடு, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ச்சியாக தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நறுவிலிக்குளம் பகுதியில் உள்ள பொது மயானப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலத்தை கண்ட முதியவர் ஒருவர் பங்குத்தந்தைக்கு அறியப்படுத்தினார்.
பங்குத் தந்தை பொலிஸார் மற்றும் கிராம அலுவலகர் ஆகியோருக்கு தகவல் வழங்கினார்.சம்பவ இடத்திற்கு முருங்கன் பொலிஸார் மற்றும் விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் வருகை தந்து விசாரனைகளை மேற்கொண்டனர்.
-இதன் போது கடந்த சனிக்கிழமை காணாமல் போன நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றிய தனது கணவரான அன்ரனிஸ் நிமால் (வயது-30) என அவரது மனைவி அடையாளம் காட்டினார்.
பின்னர் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ பிற்பகல் 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டார்.
பின்னர் பதில் நீதவானின் உத்தரவிற்கு அமைவாக பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.