24 வருஷமா என்னை விட்டுப் பிரியாத கணவருக்கு என்ன நடந்தது?: யாழ். பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 20, 2019

24 வருஷமா என்னை விட்டுப் பிரியாத கணவருக்கு என்ன நடந்தது?: யாழ். பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்

கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்காக கடந்த- 05 ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற தனது கணவரான பரமு விஜயராஜ்( வயது-48) இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது மனைவியான விஜயராஜ் சந்திரகலா தெரிவித்துள்ளார். நான் திருமணம் செய்து 24 வருஷமாகிறது. ஆனாலும், எனது கணவரைப் பிரிந்து ஒருநாளும் இருந்ததேயில்லை எனக் கண்ணீருடன் தெரிவித்த அவர் எந்தவொரு பிரச்சினைகளுக்கும் செல்லாத எனது கணவருக்கு என்ன நடந்தது? எனவும் உருக்கமுடன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் கேள்விப்பட்டு நானும் வேறு இரு ஊடகவியலாளர்களும் இன்று(20) பிற்பகல் யாழ். வடமராட்சி கெருடாவில் தெற்குப் பகுதியிலுள்ள குறித்த குடும்பத்தினரின் வீட்டுக்குச் சென்றோம்.

அங்கு சென்ற போது அந்த வீட்டில் பலரும் நின்றிருந்தனர். காணாமற் போன பரமு விஜயராஜ்ஜின் மனைவியான சந்திரகலா பெரும் சோகமே உருவாக நின்றிருந்தார். அவரைச் சூழ்ந்து பிள்ளைகளும், உறவினர்களும் நின்றிருந்தனர்.

அவருடன் நாம் பேச்சுக் கொடுத்தோம். அப்போது தனது கணவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டமை தொடர்பான சான்றினைக் காட்டினார். கணவர் தொடர்பில் பேச ஆரம்பித்தவுடனேயே விக்கிவிக்கி அழ ஆரம்பித்துவிட்டார்.

அவர் எம்முடன் பகிர்ந்து கொண்ட விடயங்கள் அப்படியே உங்களுக்காக.,.

எனது கணவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் விசாரணை அழைப்பின் பேரில் கடந்த-05 ஆம் திகதி எங்கள் வீட்டிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றார். 06 ஆம் திகதி காலை-06 மணிக்கும் 07 மணிக்குமிடையில் எனக்குப் போன் பண்ணினவர். அப்போது தான் கொழும்பு வந்து சேர்ந்திற்றன் எனவும் தான் ரிஐடி அலுவலகத்துக்குச் செல்லப் போவதாகவும் கூறியிருந்தார்.

இதன்பின்னர் எனது கணவர் தொடர்பான எந்தத் தகவல்களும் எனக்கு கிடைக்கவில்லை. எனது கணவருக்கு என்ன நடந்தது எனக் கேட்டுக் கடந்த 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்தேன்.



அவர்கள் கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது அங்கே வரவில்லை எனப் பதில் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறையிட்ட போதும் அவ்வாறே பதில் வழங்கியுள்ளார்கள்.

அப்படியென்றால் என்ர கணவருக்கு என்ன நடந்தது? சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு உரிய பதில் வழங்க வேண்டும். இதுதொடர்பாக நேற்றைய தினம் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளேன். அவர்களும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் தொடர்பு கொண்டு விசாரித்து விட்டு அங்கு வரவில்லை எனப் பதிலளித்துள்ளதுடன் தாம் தேடிப் பார்க்கிறோம் எனவும் கூறியுள்ளார்கள்.

இன்று காலை வல்வெட்டித்துறைப் பொலிஸார் வீட்டுக்கு வந்து அவரது புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.

உங்கள் கணவர் முன்னர் ஏதாவது பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டுள்ளாரா? என ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பிய போது கடந்த- 24 வருஷ காலமா கணவர் என்கூடத் தானிருக்கிறார். ஆனால், இதுவரை ஒரு பிரச்சினையும் கிடையாது. என்னை விட்டுவிட்டு ஒருகாலமும் அவர் பிரிந்திருந்ததே கிடையாது எனவும் கூறினார்.

எனக்கு ஒரு பொம்பளப் பிள்ளையும், இரண்டு ஆம்பளப் பிள்ளைகளும்…அவர்களில் இரண்டு பிள்ளைகள் இப்ப படிச்சுக் கொண்டிருக்கினம். எனது கணவர் ஓட்டோ ஓடிச் சம்பாதிச்சால் தான் எங்கள் வீட்டில் அடுப்பெரியும். அவர் அன்றாடம் உழைத்தால் தான் எங்களுக்குச் சாப்பாடு எனவும் அவர் கடும் வேதனை வெளியிட்டுள்ளார்.

எனது கணவர் இங்கு நிற்கும் போது ஏற்கனவே 7 பேர் தான் சிஜடி என்று கூறி விசாரித்துச் சென்றார்கள். இதன்பின்னர் தான் ரிஜடியிடமிருந்து இரண்டு கடிதங்கள் எனது கணவரை விசாரணைக்கு வருமாறு கோரி வந்திருந்தது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.