நீ என்ன சீமான் கட்சியா இலங்கையில் அஸ்தமனமான புலிகள் இயக்கத்துக்கு உயிர்கொடுக்க வந்திருக்கிறாயா? இலங்கையில் இயக்குநர் களஞ்சியத்துக்கு நேர்ந்த சோகம் - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, December 10, 2019

நீ என்ன சீமான் கட்சியா இலங்கையில் அஸ்தமனமான புலிகள் இயக்கத்துக்கு உயிர்கொடுக்க வந்திருக்கிறாயா? இலங்கையில் இயக்குநர் களஞ்சியத்துக்கு நேர்ந்த சோகம்

இலங்கை யாழ் பல்கலைக்கழகத்துக்கு மாவீரர் நாள் தினத்தையொட்டி சிறப்பு விருந்தினராகச் சென்ற இயக்குநர் களஞ்சியம், ராணுவத்தின் தாக்குதலால் காயங்களோடு திரும்பி வந்திருக்கிறார்.


‘நீ என்ன சீமான் கட்சியா… இலங்கையில் அஸ்தமனமான புலிகள் இயக்கத்துக்கு உயிர்கொடுக்க வந்திருக்கிறாயா?’ எனக் கேட்டு ராணுவம் தாக்கியதாகக் கூறுகிறார் களஞ்சியம்.

மாவீரர் நாள் நிகழ்ச்சிக்காகக் கடந்த மாதம் 27ம் தேதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்றிருக்கிறார் தமிழர்நலன் பேரியக்கத்தின் தலைவரும் இயக்குனருமான மு.களஞ்சியம். இவ்விழாவை முடித்துவிட்டுத் திரும்பும் வழியில்தான் இப்படியொரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் களஞ்சியத்தைத் தொடர்பு கொண்டு பேசினோம். ‘மாவீரர் நாள் நிகழ்வுக்காக ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று உரையை நிகழ்த்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால், இலங்கையில் நடத்தினால் என்ன என்று நினைத்தேன். அதற்கேற்ப, இலங்கையில் உள்ள இளைஞர்கள் சிலர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். நானும் கலந்து கொண்டு விழாவில் பங்கேற்றுவிட்டு அறைக்கு வந்தேன். அப்போது இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து, `நீங்கள் யார்.. எங்கிருந்து வருகிறீர்கள். இங்கு உங்களுக்கு என்ன வேலை?’ என மிரட்டும் தொனியில் கேள்விகளைக் கேட்டார்கள். நானும் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தேன். இது அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ‘உங்களை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

பின்பு நான் கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வந்தபோது, இலங்கை ராணுவத்தினர் என்னைப் பின்தொடர்ந்து வந்தனர். அப்போது வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்கேஷ்வரனும், ‘நீங்கள் இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது, உடனே கிளம்புங்கள்’ என்றார். ‘எதற்காகத் தேவையில்லாமல் பிரச்னையில் சிக்க வேண்டும்?’ என்பதற்காக நானும் கிளம்ப முயன்றேன்.

பலாலி விமான நிலையத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக விமானத்தில் கிளம்பினேன். ஆனால், திரிகோண விமான நிலையத்தில் என்னை மட்டும் இறக்கிவிட்டார்கள். அத்துடன், ஏதோ சிறைக் கைதியை அழைத்துச் செல்வதுபோல் தரக்குறைவாக நடத்தினார்கள். பின்பு ஒரு மணிநேரம் கழித்து இலங்கை ராணுவத்தினர் என்னிடம் வந்து, ‘உன் தலைவன் யார். நீ எங்கிருந்து வருகிறாய்… எதற்காக இங்கு எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்தாய்…?’ எனப் பல கேள்விகளைக் கேட்டார்கள். அதற்கு நான், ‘எனக்குத் தலைவன் என யாரும் கிடையாது’ என்றேன்.

அப்போது, 2016-ல் நான், சீமான், வேல்முருகன் ஆகிய மூவரும் எடுத்துக்கொண்ட போட்டோவைக் காட்டி ‘நீ என்ன சீமான் கட்சியா. இலங்கையில் அஸ்தமனமான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர்கொடுக்க வந்திருக்கிறாயா?’ என ஒரு அதிகாரி பேசிக் கொண்டிருக்கும்போதே, எனக்குப் பின்னால் இருந்த ஒருவர் அவர் வைத்திருந்த துப்பாக்கியால் என்னைக் கடுமையாகத் தாக்கினார். இதில் எனது பல் மற்றும் கழுத்து எலும்பு உடைந்தது. நான் வலியால் துடித்தேன். ஆனாலும், அவர்கள் என்னை விடவில்லை. 5 மணிநேரம் என்னைக் கடுமையாக அடித்தார்கள்.

பின்னர், சிறு விமானத்தில் என்னை ஏற்றி அனுப்பினார்கள். ‘விமானத்திலிருந்து தள்ளிவிடப் போகிறார்கள்’ என்ற உயிர் பயத்திலிருந்தேன். அப்படி இருந்தும் ‘தலைவன் வாழ்ந்த இடத்தில் என் உயிர் போனாலும் பரவாயில்லை’ என்று மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ரத்தக் காயத்தோடு இங்கு வந்தேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். நான் எப்படி மருத்துவமனைக்கு வந்தேன் என்றுகூட தெரியவில்லை’’ என்றவர்,

‘இலங்கையில் நடந்த தாக்குதல் விவகாரத்தை இந்திய தூதரகத்திடம் கொண்டு சென்று பெரிய பிரச்னையாக ஆக்கியிருக்க முடியும். ஆனால், அதைச் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன். காரணம் அங்குள்ள இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்றார் வேதனையான குரலில்.

நன்றி- ஆனந்த விகடன்